சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அதிமுக பிளவுபடும் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை

சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அதிமுக பிளவுபடும் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினர்.

 • Share this:
  ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினா கடற்கரையில் 57 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 27-ம் தேதி இந்த நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அதே நாளில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவும் விடுதலையாக உள்ளார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  கூட்டத்தில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்தும், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் அதிமுக தொண்டர்களை அழைத்து வருவது குறித்தும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினர். மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளின் நிலை குறித்தும், தொகுதி நிலவரம், அமைச்சர்களின் தேர்தல் பிரசார திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கான கூட்டணி பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், சசிகலா வருகைக்கு பிறகு, அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் யாராவது கருத்து தெரிவித்தால், அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அதனால் சசிகலா குறித்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 45 நிமிடங்களில் நிறைவடைந்ததை அடுத்து, ஓபிஎஸ்,  இபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் மட்டும் தனியாக ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளையும் ஆய்வு செய்தனர்.

   
  Published by:Ram Sankar
  First published: