முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை 16 தீர்மானங்களை வாசித்தார்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாகவும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் வழங்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடுமையாக உழைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவது எனவும், பக்குவமின்றி விவாதிக்கும் திமுகவினரை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என அறிவித்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத முன்னுரிமை வழங்கியது பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்குவது, மினி கிளினிக்குகள் போன்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக கூறினார். மருது சகோதரர்கள் போல இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து வெற்றி பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்றும், அவர்கள் அதிமுக அல்லது திமுக மேல் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குறிப்பிட்டார். சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என சிலர் கூறி வருவதாகவும், அவர் வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும், சசிகலாவுக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் யாரும் கிடையாது என்றும் முனுசாமி கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்