ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வரும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார் மனு அளித்துள்ளது.
தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ள ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அ.தி.மு.க சார்பில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்த புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாறன், ‘முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பேசிய ஆ.ராசா மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து நேற்றைய தேர்தல் பரப்புரையிலும் ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் ஆ.ராசா பேசியுள்ளார். இது முதலமைச்சர், துணை முதலமைச்சரை மட்டுமல்லாது பெண் இனத்தையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
தொடர்ந்து ஆபாச மற்றும் வெறுப்பு பேச்சுக்களை ஆ.ராசா பேசி வருவதால், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆ.ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். இதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உறுதியளித்துள்ளார்’ என்றார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.