’மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகர், எடப்பாடி அரசாங்க நாயகர்’- ஆர்.பி.உதயகுமாருடன் அதிரடி

Youtube Video

மு.க.ஸ்டாலின் வெறும் அறிக்கை நாயகராகவே உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
மதுரை திருமங்கலம் தொகுதியில் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமைச்சர், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் நியூஸ் 18 க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மீண்டும் திருமங்கலம் தொகுதியில் களம் காண்கிறீர்கள்.. மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?*

பதில்: மகளிருக்கு ஊக்கத்தொகை, கேஸ் சிலிண்டர் இலவசம் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கையே மக்களின் வரவேற்பில் தெரிகிறது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கை காலி பெருங்காய டப்பா. அதிலிருந்து வாசனை வருமே தவிர அதில் பெருங்காயம் இருக்காது. ஆனால், அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கட்டித் தங்கம். அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

கேள்வி: மீண்டும் வென்றால் உங்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

பதில்: மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையை பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தையல், கம்ப்யூட்டர் ஆகிய சுய வேலைவாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். திருமங்கலத்தில் பசுமை வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு சொந்த முயற்சியில் பட்டா போட்டு கொடுப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கு புதிய தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை, பாரத் டெண்டர் முறைகேடு விவகாரம் மற்றும் திருமங்கலம் பேருந்து நிலையம் புதுப்பித்தல், ரயில்வே நிலையம் அருகே மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல அடிப்படை தேவைகள் இன்னும் முழுமையாக மக்களுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைத்துள்ளனரே..?

பதில்: இது எதிர்க்கட்சிகளின் அரசியல் உள்நோக்கம் உள்ள பார்வை. அவர்கள் சொல்லிலும், செயலும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இருக்கிறது.அவர்களுக்கு பதவி காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எனவே தான், நாங்கள் செய்தது எல்லாம் செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. மதுரை அரசு மருத்துவமனை கட்டுவதற்கான நிதியும் ஜப்பான் பன்னாட்டு முகமையிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதுபோலவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் கடன் வாங்கியுள்ளோம். ஆனால், அதையும் எதிர்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திமுக ஒரு போர்டு கூட ஊன்றவில்லை, நாங்கள் அடிக்கல் நாட்டி உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவ பணிகள் தாமதம் ஆனது உண்மை தான், அதை நாங்கள் மறுக்கவில்லை. கொரோனா நோய் தொற்று காரணமாகவே பணிகள் மந்தமாக நடைபெற்றன. இனி பணிகள் விரைவாக நடைபெறும்.

கேள்வி: உங்களை எதிர்த்து தி.மு.க, அ.ம.மு.க சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் பலம் பொருந்தியவர்களாக பார்க்கப்படுகின்றனர். அவர்களை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

பதில்:  தேர்தல் என்றால் அனைத்து கட்சிகளும் நம்பிக்கையுடன் களத்தில் நிற்பார்கள். மக்களினுடைய ஆதரவைப் பெறுவது என்பது எளிதான காரியமில்லை. ஒரே நாளில் மக்களின் ஆதரவைப் பெற்று விட முடியாது.அவர்கள் நீதிமான்கள் சரியாகத்தான் தீர்ப்பு அளிப்பார்கள்.பத்து வருடம் நான் அமைச்சராக உள்ளேன் ஆனால் என்னை யாரும் அமைச்சர் என்று சொல்லமாட்டார்கள் ஏனெனில் மக்களோடு மக்களாக உள்ளேன். திருமங்கலம் தொகுதியில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

கேள்வி:  நீங்கள் கடவுளாக வணங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல், நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல்..பல முனைப் போட்டிகள் உங்களுக்கு சவாலாக இருக்கும் எனது தோன்றுகிறதா?குறிப்பாக டிடிவி தினகரன்?*

பதில்:  ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுடன் இருக்கிறது. அவர்களுடைய ஆசி எங்களுக்கு இருக்கிறது என்பதை நம்பியே களத்தில் இருக்கிறோம். அவர் விண்ணகத்திலிருந்து நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நடப்பதில் ஞாயம் எது சத்தியம் எது என்பது அவருக்கு தெரியும்.
அதற்கு, சாட்சியே கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலை ஒரு மினி பொது தேர்தலாக மாற்றி அம்மா வெற்றி பெற்றுக் கொடுத்தார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாமானியர். இந்த வெற்றி எல்லாம் ஜெயலலிதா கொடுத்த வெற்றி.ஜெயலலிதாவின் பெயரை சொல்லி நாங்கள் அரசியல் வியாபாரம் செய்வதாக சிலர் சொல்கிறார்கள் ஆனால் ஜெயலலிதாவின் பெயரை சொல்வதற்கு யார் உரிமை உள்ளவர்கள் என்பது இரட்டை இலை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சி அமைக்கும் போது மக்களுக்கு தெரியும்.

கேள்வி:  மக்கள் தீர்ப்பு மாறும் கட்சியை கைப்பற்றுவோம் என சிலர் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் வருகின்றனவே...?*

பதில்:  கள நிலவரத்தை தெரிந்து கொண்டும் தெரியாதது போல பேசுகிறார்கள். தேர்தல் பரபரப்பில் விளம்பரம் தேடுகிறார்கள்.இதனால் மக்களின் செல்வாக்குப் பெற முடியாது இப்படி பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தேர்தல் முடிந்தவுடன் சென்று விடுவார்கள் நாங்கள் தேர்தலில் வென்று மீண்டும் மக்கள் பணியாற்றுவோம்.

கேள்வி: தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை இரண்டாம் கதாநாயகன் என ஸ்டாலின் தெரிவித்து உள்ளாரே...?*

பதில்: எப்போதும் ஒரு கதைக்கு ஒரு கதாநாயகனே இருப்பார்கள். தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது.ஸ்டாலின் வெறும் அறிக்கை நாயகர், ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசாங்க நாயகர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: