91 LAKHS SEIZED FROM NEAR RANIPET ADMK CANDIDATE BUNGALOW SRS
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார் பங்களாவின் அருகே இருந்து 91 லட்சம் பறிமுதல்!
மாதிரிப் படம்.
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரின் சொகுசு பங்களா அருகே முட்புதரில் இருந்து 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார், வானாபாடி வசந்தம் அவென்யூவில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், பங்களாவில் 30-க்கும் மேற்பட்டோர் ரகசியமாக கூடியிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர், டிஎஸ்பி, சார் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பங்களாவில் சுற்றுச்சுவரை தாண்டி தப்பியோட முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் சுகுமாருக்கு தேர்தல் பணிக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட 27 நபர்களில் ஒருவர் என தெரியவந்தது.
மேலும், இளைஞர்களை கடந்த இரு நாட்களாக பணப்பட்டுவாடா செய்ய பயன்படுத்தியதும், அதில், ஒருவர் 15 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது. இதனால், இளைஞர்களை பங்களாவில் அடைத்து வைத்து துன்புறுத்தியதும் தெரியவந்தது. அதேநேரம், பங்களாவில் இருந்த மற்ற இளைஞர்களிடம் விசாரித்ததில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்க மட்டும் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து பங்களா அருகே உள்ள முட்புதரில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த 3 பையை சோதனை செய்ததில் 91 லட்சத்து 67 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் சுகுமார், அவரது மகன் கோபி ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட 27 நபர்களும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.