முகப்பு /செய்தி /அரசியல் / இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம்- கமல்ஹாசனின் 7 அம்ச தேர்தல் வாக்குறுதி

இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம்- கமல்ஹாசனின் 7 அம்ச தேர்தல் வாக்குறுதி

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் ஆட்சிமுறை மற்றும் பொருளாதாரப் புத்தெழுச்சிக்கான 7 செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம் உள்ளிட்ட 7 அம்ச தேர்தல் வாக்குறுதி செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் ஆட்சிமுறை மற்றும் பொருளாதாரப் புத்தெழுச்சிக்கான 7 செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

* நேர்மையான துரித நிர்வாகம்-உலகத்தரம் வாய்ந்த ஒரு அரச நிர்வாகத்தை தமிழகமும் தமிழக மக்களும் பெற்றிடும் வகையில் முதல் திட்டமாக, கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் முதல், முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகங்கள் என்ற எங்களின் முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். காகிதக் கோப்புகளை தடைசெய்து, அதனால் ஏற்படும் தாமதங்களை நீக்கி, இணையவழியில் நேர்மையான, வெளிப்படையான, துரிதமான அரசு அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவோம். இணையவெளியில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் உரிமைகளையும் பெரும்வகையில் எங்களது அரசாங்கம் நடைபெறும். அரசு சார்ந்து மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், ஆணைகளையும், அனுமதிகளையும் தங்களின் கைபேசியில் பெறும்வண்ணம் எங்களது இணையவழி அரசு இயங்கும்.

* இணையத்தொடர்பு என்பது மக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணையவசதி செய்து கொடுக்கப்படும்.

* நவீன தற்சார்பு கிராமங்கள்-கிராமப்புறங்களில் இருக்கும் மனிதவள ஆற்றலை சரியாகப் பயன்படுத்தும் வகையில் தொழில்முனைவோர்களையும், தொழில்நிறுவனங்களையும் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் தங்கள் கிளை அலுவலகங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியுறுத்தும். இளைஞர்களை வேலை கேட்பவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக எங்கள் அரசு மாற்றும்.

* பெண்சக்தி-பாரதியாரின் புதுமைப்பெண் என்ற கனவு மெய்ப்பட, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனையும் ஆற்றல் என்று அனைத்து வகையிலும் பெண்கள் முன்னேறிட எங்கள் அரசு செயல்திட்டங்கள் வகுக்கும். இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்.

* பசுமைப்புரட்சியுடன் விவசாயத்தொழில் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் அது உண்மையிலே வருமானமும், லாபமும் உள்ள ஒரு நேர்மையான வணிகமாக மாற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் எங்கள் அரசால் செய்து தரப்படும். விவசாயத்தொழில் செழித்திட சரியான போக்குவரத்து திட்டங்களும், விளைபொருட்களை சேமித்துப் பாதுகாத்திட தேவையான குளிர்சாதன கிடங்குகள் போன்றவையும் அமைக்கப்படும்.

* சூழலியல் சுகாதாரம்-மாறிவரும் சூழலியலுக்கு ஏற்றவகையில் சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள் அரசின் முழுமுதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு, சாத்தியமானவை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

* வறுமைக்கோடு என்ற பழைய அளவீடு மாற்றப்பட்டு, ‘செழுமைக்கோடு’ என்ற புதிய அளவீடு அமைக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை செழுமைக்கோட்டுக்குக் கொண்டுவரும் முதல் அரசாக எங்கள் அரசு செயல்படும். ஒவ்வொரு குடிமகனின் அறிவையும், திறனையும் சரியாக வெளிக்கொணரும் வகையில் திட்டங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam, TN Assembly Election 2021