பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மகளின் திருமணத்திற்கு பணம்சேர்த்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி தாய்..

சீர்காழி அருகே மூதாட்டி ஒருவர் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மகளின் திருமணத்திற்காக பணம் சேர்த்து வைத்துள்ளார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மகளின் திருமணத்திற்கு பணம்சேர்த்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி தாய்..
  • Share this:
சீர்காழி அருகே மாதிரவேளூர் பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58) கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (52),மகள் விமலா (17) உஷாவும்,விமலாவும் வாய்பேசமுடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். இந்நிலையில் உஷா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு சென்று வந்த கூலியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்துள்ளார்.

மத்திய அரசால் பணமதிப்பிழப்பு செய்தது கூட தெரியாமல் 1000 ரூபாய் நோட்டுகள் 10-உம், 500 ரூபாய் நோட்டுகள் 51 என மொத்தம் ரூ.35,500 சேமித்து வைத்து அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் பத்திரமாக சுருட்டி, அதனுடன் அரைபவுன் தங்கம் தோடு ஆகியவற்றையும் வைத்து தனது கணவருக்கு கூட தெரியாமல் தனது வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டி புதைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000,ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து காது கேட்காத உஷாவும், விமலாவும் அறியவில்லை. இந்நிலையில் ராஜதுரை தனது கூரை வீட்டை தமிழக அரசின் நிதியுதவியுடன் கட்டப்படும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்று வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். வீடு கட்டும் பணிக்காக தொழிலாளர்கள் ராஜதுரை வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டியபோது அங்கு பிளாஸ்டிக் பை  ஒன்று சிக்கியது.


அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ.1000,ரூ.500நோட்டுகள் அதிகளவு இருந்தன. அதனை எடுத்து பார்த்தபோது ரூ.35,500 இருந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உஷாவிடம் தெரிவித்தனர். அந்த பணம் தனது மகள் திருமணத்திற்காக தான் சேர்த்து பத்திராமாக வைத்துள்ளேன் என சைகை மூலம் தெரிவித்துள்ளார்.

அப்போது தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 4ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துவிட்டது என தெரிவித்ததும் உஷா,விமலா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தனது கணவருக்கு தெரியாமல் எனது மகள் திருமணத்திற்கு சேர்த்துவைத்த பணம் இது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் எனக்கு தெரியாது. காதுகேளாத எனக்கு இந்த தகவலை யாரும் சொல்லவில்லை. என்னிடம் இவ்வளவு பணம் இருப்பது எனது கணவருக்கே தெரியாது. எனது மகள் திருமணத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை. தமிழக அரசு இந்த ரூபாய் நோட்டை மாற்றிதர எதேனும் உதவி செய்யவேண்டும் என கண்ணீர் மல்க சைகை மூலம் தெரிவித்ததை அவரது கணவர் ராஜதுரை நம்மிடம் எடுத்து கூறினார்.

செல்லாத நோட்டுக்களை விவரம் தெரியாமல் மூதாட்டி சேர்த்து வைத்திருந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சோகத்துடன் மூதாட்டிக்கு ஆறுதல் கூறினர். தமிழக அரசு ஏழை மாற்றுதிறனாளி மூதாட்டியின் மகள் திருமணத்திற்கு உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories