ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

பெரம்பலூரில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்.. 2 பேர் பலி...25 பேர் காயம்

பெரம்பலூரில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்.. 2 பேர் பலி...25 பேர் காயம்

சாலை விபத்து

சாலை விபத்து

Perambalur News: பெரம்பலூரில் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பயணிகள் வேன் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Perambalur, India

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பயணிகள் வேன் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருச்சி மாவட்டம் இருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் டைட்டஸ்(20) இவர் அவரது நண்பர் பெரம்பலூர் அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த சிவா(17), அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராபின்(22) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் இருங்களூர் நோக்கி சென்றுள்ளனர்.

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில்  பெரம்பலூர் 3ரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு பின்னால் சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சுற்றுலா சென்ற கார் மோதி விபத்துக்குள்ளாகியது. கார் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் சென்டர் மீடியனைத் தாண்டி எதிர்ப்புறத்தில் வந்து விழுந்தது.

அதே வேகத்தில் காரும் சென்டர் மீடியனை தாண்டி எதிர்புறத்தில் திருச்சி - சென்னை மார்க்கத்தில் சென்னை நோக்கி சென்ற இரண்டு சொகுசு கார்களின் மீது லேசாக மோதி, மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு கோவிலுக்கு செவ்வாடை பக்தர்கள் சென்ற பயணிகள் வேனின் முன்பக்கத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில்  பயணிகள் வேன் கவிழ்ந்தது, காரும் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த டைட்டஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவருடன் வந்த சிவா மற்றும் ராபின் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல காரை ஓட்டி வந்த, சென்னை கொரட்டூரை சேர்ந்த பிரவீன் (30) பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடன் வந்த அவரது சகோதரர் பிரகாஷ்(30), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கெவின்(28), வெங்கடேஷ்(25) ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

மேலும் பயணிகள் வாகனத்தில் வந்த செவ்வாடை பக்தர்களின், வேன் ஓட்டுநர் பத்மநாபன் (30) உட்பட 27 பேர்  லேசான காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தவுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.

First published:

Tags: Local News, Perambalur, Road accident, Tamil News, Trichy