Home /News /perambalur /

சட்டவிரோத மணல் கடத்தல்.. கொள்ளை லாபம் பார்க்கும் கடத்தல் கும்பல் - பெரம்பலூரில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

சட்டவிரோத மணல் கடத்தல்.. கொள்ளை லாபம் பார்க்கும் கடத்தல் கும்பல் - பெரம்பலூரில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

மணல் கொள்ளை

மணல் கொள்ளை

sand smuggling | பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள வயலப்பாடி சின்னாற்றில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெற்று வருவதோடு, ஒரு யூனிட் மணல் ரூ.15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

    தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதால், ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு, தமிழக அரசு சட்டவிரோத மணல் கடத்தலுக்கு தடை விதித்துள்ளது. அவ்வாறு மணல் கடத்துவது சட்டப்படி குற்றம் என்பதால், வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் மணல் கடத்துபவர்களை கைது செய்து கடத்தல் மணலுடன் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் நலன் கருதி முக்கிய ஆறுகளில் மணல் குவாரிகளை அமைக்க அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலமாக பட்டப்பகலில் மணல் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் மாட்டு வண்டி மூலமாக இரவு நேரங்களிலும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசியல் பிரமுகர்களின் துணையோடு நடைபெறும் இந்த சட்டவிரோத மணல் கடத்தலுக்கு குன்னம் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளும், குன்னம் காவல்துறையினரும் உடந்தையாக இருப்பாத கூறப்படுகிறது.

    இவ்வாறு கடத்தப்படும் மணல் ஒரு யூனிட்-க்கு ரூ.15,000க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கட்டுமானப்பொருட்கள் விலை வானளவிற்கு உயர்ந்து வரும் நிலையில் எம் சாண்ட், மற்றும் பி.சாண்ட் குறித்த விழிப்புணர்வு இன்மையாலும், அதன் உறுதித்தன்மை குறித்த அச்சம் இருப்பதாலும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து இந்த மணலை வாங்குவதால் இதனை மணல் கடத்தல் கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து  டிராக்டர்களில் எந்த வித அச்சமும் இன்றி மணல் கடத்தலில் ஈடுட்டு வருகின்றனர்.

    ஏழை எளிய மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்வதற்காகவும், அவசரத் தேவைக்காகவும் சாக்குகளில் நிரப்பி இரு சக்கரவாகனத்தில் எடுத்து வந்தால் வழக்கு போட்டு கைது செய்யும் துறை சார்ந்த அதிகாரிகளின் கண்ணுக்கு பட்டப்பகலில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து மணல் கொள்ளை நடப்பது தெரியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை என்று தெரிவிக்கும் பொதுமக்கள், இதுபோன்ற மணல் கடத்தலினால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, விவசாயம் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரவிக்கின்றனர்.

    மணல் கடத்தலால் பள்ளமான ஆறு


    இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் சத்தியசீலனிடம் கேட்டபோது, நாங்கள் அவ்வப்போது, சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரையில் இதுகுறித்து புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும் இந்த புகார் குறித்து அதிரடியாக  சோதனைகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறார்.

    Also see... நீலகிரி பூங்காக்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்...

    எது எப்படியோ அரசு எவ்வளவு சட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும், அவற்றை புறந்தள்ளிவிட்டு, தங்கள் பாணியில் சட்டவிரோத மணல் கடத்தலை அச்சமின்றி அரங்கேற்றி வருவது, இது போன்ற கும்பலக்கு கைவந்த கலையாகிப்போனது எப்படி என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றால் அது மிகையாகாது..

    செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Sand mafia

    அடுத்த செய்தி