ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி சுருட்டல்.. மோசடி பேர்வழி சிக்கியது எப்படி?

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி சுருட்டல்.. மோசடி பேர்வழி சிக்கியது எப்படி?

மோசடி செய்த பிரகாஷ்

மோசடி செய்த பிரகாஷ்

பெரம்பலூரை சேர்ந்த தம்பதி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.83 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Perambalur, India

  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்கிளாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(40) டிப்ளமோ வரை பயின்ற இவர் ஊரக வளர்ச்சி துறையில் இணை செயலாளராக வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் சுபாஷ் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பதாகவும் அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

  இதனை நம்பி பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்பாபு(25) என்பவர் தனக்கும் தனது மனைவி சாருமதி(23) என்பவருக்கும் அரசு வேலைக்காக தலா ரூ.15 லட்சம் விதமாக ரூ.30 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். இதில் மோகன் பாபுவிற்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையும், சாருமதிக்கு வி.ஏ.ஓ .,வேலையும் வாங்கி தருவதாக பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.

  இவரின் பேச்சை நம்பி மோகன்பாபுவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களான அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த கலையரசி(27) என்பவரிடம் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.10 லட்சமும், கடலூர் மாவட்டம் ஆனந்தகுடியைச் சேர்ந்த சுதர்சன்(32), பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம்(33), உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன்(24)  நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கலைவாணி(33) ஆகியோரிடம் உதவி திட்ட இயக்குனர் வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ. 6 லட்சமும் பெற்றுள்ளார்.

  மேலும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த மதன்(32) என்பவரிடம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர் பணி  வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சமும் என 23 நபர்களிடம் மொத்தமாக ரூ.1 கோடியே 83 லட்சம் பணத்தை நேரடியாகவும் வங்கிக் கணக்கு மூலமாகவும் பிரகாஷ் பெற்றுள்ளார்.

  இவ்வாறு பெற்ற பணத்துடன் தலைமறைவாகி போன பிரகாஷ் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. வாங்கிய  பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் மோகன்பாபுவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த பிரகாஷை  கடந்த 29ஆம் தேதி மோகன்பாபு பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

  மேலும் பிரகாஷை தனது வீட்டில் வைத்து பணத்தை திரும்பித் தருமாறு மோகன்பாபு மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் பிரகாஷின் உறவினரான பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த தேவராணி(35) என்பவர் காவல்துறையின் அவசர எண்ணான 100க்கு போன் செய்து பிரகாஷை சிலர் கடத்திச் சென்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

  இதனையடுத்து அவர் கூறியபடி மோகன்பாபு வீட்டிற்கு சென்ற போலீசார் பிரகாஷையும் மோகன்பாபையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரகாஷ் தனது நண்பர்களான  சுபாஷ் மற்றும் சசிகுமார் உதவியுடன் மோகன்பாபு மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என 23 நபர்களிடம் ரூ.1 கோடியே 83 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

  Also see...  இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்-ராகுல்

  இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி குற்றவாளிகள் மீது சிவகங்கை மாவட்டம் மற்றும்  திருச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் மோசடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தினால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர்: ஆர் ராஜவேல்,பெரம்பலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cheating case, Job, Perambalur