முகப்பு /செய்தி /பெரம்பலூர் / வாசலில் காத்திருந்த ஜெயராம்.. பின்பக்கமாக போன இயக்குநர்.. மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த கலகல சினிமா!

வாசலில் காத்திருந்த ஜெயராம்.. பின்பக்கமாக போன இயக்குநர்.. மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த கலகல சினிமா!

ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்

ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்

மலையாளப் படத்தின் நகைச்சுவையில் பத்து சதவீதம்தான் தமிழ்ப் படத்தில் இருந்தது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1989 -ல் மலையாள வணிக சினிமா உலகில் ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் திரைப்படம் புயலென நுழைந்தது. காட்சிக்குக் காட்சி நகைச்சுவையுடன் பல்சுவை விருந்து படைத்த அந்தப் படத்தை சித்திக் - லால் என்ற இருவர் இயக்கியிருந்தனர். இருவரும் பிற்காலத்தில் பெரிய இயக்குநர்களாக வருவார்கள் என்பதை முதல் படமே சொன்னது. கொச்சின் கலாபவன் மிமிக்ரி குரூப் பல மலையாள நடிகர்களை உற்பத்தி செய்த கலாகேந்திரம். சித்திக்கும், லாலும் முதலில் அந்த ட்ரூப்பில் இருந்தனர். அவர்களை அந்த ட்ரூப்பில்தான் இயக்குநர் பாசில் கண்டுபிடித்தார்.

பிறகு இருவரும் அவரது படங்களில் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தனர். தனியாக படம் செய்யும் எண்ணம் வந்ததும் மோகன்லாலிடம் கால்ஷீட் கேட்பதாகத்தான் இருவருக்கும் திட்டம் இருந்தது. பாசில் அழைத்து, பெரிய நடிகரை வைத்து படம் செய்தால் பெயர் அந்த நடிகருக்குதான் போகும், சின்ன நடிகரை வைத்து எடுங்கள் என்று அறிவுரைக்கூற, ஜெயராமிடம் சென்றனர்.

கலாபவனில் ஜெயராம், சித்திக் - லால் ஆகியோரின் ஜுனியர்.

கதையைக் கேட்ட ஜெயராம், கதை பிரமாதம் கால்ஷீட் தருகிறேன் என்று போக்கு காட்டினார். அதற்கொரு பிளாஷ்பேக் உண்டு. சித்திக் - லால் கலாபவனில் இருந்த போது வாய்ப்பு கேட்டு ஜெயராம் வந்துள்ளார். இவர்கள் அவரை முன்பக்கம் வெயிட் பண்ணும்படி கூறிவிட்டு, பின்பக்கம் வழியாக கிளம்பிப் போயிருக்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவார்கள் என்று மணிக்கணக்கில் ஜெயராம் காத்திருக்க, உள்ளே சென்றவர்கள் வெளிகேட் வழி உள்ளே வரும்போதுதான் ஜெயராமுக்கு விஷயம் பிடிபட்டிருக்கிறது.

எல்லாம் சும்மா விளையாட்டுக்குதான். அதே விளையாட்டை ஜெயராம் திருப்பி ஆடுவதை உணர்ந்ததும் முகேஷிடம் வந்தனர். வாய்ப்பு தேடி வந்த கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயரின் மகன் சாய்குமாரை இன்னொரு நாயகனாக்கினர். இவர்களுடன் இன்னசென்ட். நாடகங்கள் இல்லாமல் நொடித்துப்போன கம்பெனியின் ஓனர் இன்னசென்ட். அங்கு தங்கியிருக்கும் வேலையில்லாத, கொஞ்சம் பிராடுத்தனங்கள் நிறைந்த இளைஞன் முகேஷ். அவர்களுடன் கூடுதலாக வந்து சேரும் சாய்குமார். இதுதான் கதைக்களம். சாய்குமாருக்கு சேர வேண்டிய வேலையை ரேகா தட்டிப் பறிப்பார். நியாயம் கேட்கப் போகும் இடத்தில் ரேகாவின் வறுமையான வீட்டுச் சூழல் கண்டு பேசாமல் திரும்பி வருவார். இது படத்தின் கிளைக்கதை.

மெயின் கதை பணத்தேவை.. யாரைக் கொன்று நாலு காசு சம்பாதிக்கலாம் என்றிருக்கையில் பக்கத்து வீட்டு பணக்காரரின் குழந்தையை கடத்திய கும்பலின் போன் கால் தவறுதலாக இவர்களுக்கு வரும். இதனை வைத்து அவர்கள் செய்யும் கோல்மால் பிளான் என்னானது என்பது கதை.

இன்னசென்டும், முகேஸும் நகைச்சுவையில் மாஸ்டர்கள். சாய்குமாரும் அவர்களுக்கு ஈடுகொடுத்தார். ராம்ஜிராவ் என்ற கடத்தல் காரராக விஜயராகவன். காட்சிக்குக் காட்சி காமெடியை வைத்து தியேட்டரை பிளாஸ்ட் செய்தார்கள் சித்திக்கும் லாலும். அதன் பிறகு, இன் ஹரிஹர் நகர், காட்ஃபாதர், வியட்நாம் காலனி, காபுள்ளிவாலா என்று தொடர் ஹிட்கள். அதன் பிறகு சித்திக்கும் லாலும் பிரிந்தனர். சில படங்களை லால் தயாரிக்க, சித்திக் இயக்கினார்.

பிறகு கிங் லையர் படத்தின் திரைக்கதையை இணைந்து எழுதினர். இவர்கள் இணைந்து இயக்கிய படங்களும் சரி, சித்திக் தனியாக இயக்கிய ஹிட்லர், ப்ரெண்ட்ஸ் பாஸ்கர் தி ராஸ்கல் படங்களும் சரி, அனைத்தின் பெயர்களும் ஆங்கிலத்தில் இருக்கும். காபுள்ளிவாலா மட்டும் இந்தி. அப்படி சித்திக் - லால் என்ற பிரமாதமான இயக்குனர் ஜோடியின் அறிமுகப்படமான ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்கை அவர்களின் குரு பாசில் அரங்கேற்ற வேளை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். சாய்குமார் வேடத்தில் பிரபு, இன்னசென்ட் வேடத்தில் வி.கே.ராமசாமி. முகேஷ் வேடத்தில் ஆண் நடிகருக்குப் பதில் ரேவதியை நடிக்க வைத்தார்.

அரங்கேற்றவேளைக்கு முன் பாசில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16 படங்களை தமிழில் இயக்கியிருந்தார். எல்லாமே அவர் மலையாளத்தில் இயக்கிய படங்களின் ரீமேக் முதல்முறையாக இன்னொருவர் இயக்கிய படத்தை அவர் ரீமேக் செய்தார். அப்படி அவரது வாழ்வில் ஒருமுறைதான் நடந்தது, அதுதான் அரங்கேற்ற வேளை.

மலையாளப் படத்தின் நகைச்சுவையில் பத்து சதவீதம்தான் தமிழ்ப் படத்தில் இருந்தது. மொழி, கதைக்களம், நடிகர்கள் என பல காரணங்கள். படம் வெளியாகி சுமாராகப் போனது.

இளையராஜாவின் இசையில் வாலி எழுதிய ஆகாய வெண்ணிலாவே, பிறைசூடன் எழுதிய குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் பாடல்கள் ஹிட்டாயின. 1990 பிப்ரவரி 23 வெளியான அரங்கேற்ற வேளை 23 வது ஆண்டை நிறைவு செய்கிறது.

First published:

Tags: Classic Tamil Cinema