பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே ஒருமைப்பாடு ஏற்படுத்தும் வகையில் செல்லியம்மன் கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்தி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கிராமத்தில் 1912-ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் 110 ஆண்டுகள் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சியர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்பாக இரு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வி.களத்தூர் கிராமத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இதில் வி.களத்தூர் ஜமாத் சார்பில் சந்தனக்கூடு திருவிழா கடந்த மே 16-ம் தேதி அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்கள் இந்து சமய பிரமுகர்களிடம் வழங்கி அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள். மேலும், அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கி எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக சுமூகமாக இருதரப்பு சமுதாயத்தினரும் இணைந்து நடைபெற்று முடிந்தது.
அதேபோல வி.களத்தூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா ஆலயங்களில் பூரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி உலா ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
சமுதாய நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்தும் வகையில் பூரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் இந்துக்கள் வழங்கி திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் இரு சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து எவ்வித அசம்பாவிதமும் இன்றி சுவாமி திருவீதி உலா விழாவை நடத்தினார்கள். இந்நிகழ்வுகளில் அரசுத் துறை அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
(செய்தியாளர்- ராஜவேல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindus and muslims, Perambalur