உதகை மற்றும் அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைப்பனி தொடர்வதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் கருகி வருவதால் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான பனிக்காலம் தாமதமாக தொடங்கி இருந்தாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வாரம் அதிகாலை நேரங்களில் கடும் உறைப்பனி பொழிவு காரணமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அது தற்போது படிப்படியாக குறைந்து கடந்த 3 நாட்களாக உதகையில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையாக பதிவாகி வருகிறது.
அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்குருத்தி போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் -3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
குறிப்பாக உதகை மற்றும் அதனை ஒட்டி உள்ள அவலாஞ்சி, எமரால்டு, எடக்காடு, இத்தலாறு, கல்லக்கொரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் அதிகாலை நேரங்களில் 0 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக வெப்பநிலை பதிவாவதால் புற்கள் மட்டுமிட்டுமின்றி மலை காய்கறி செடிகள் மீதும் உறைப்பனியானது அதிகாலை நேரங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல படிந்து காணப்படுகிறது.
பசுந்தேயிலை செடிகளின் மீது படியும் உறைபனியால் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான தேயிலை செடிகள் கருகி தேயிலை தோட்டங்கள் கருநிறத்தில் காட்சியளிக்க தொடங்கி உள்ளன. இதனால் இன்னும் 3 மாதங்களுக்கு பசுந்தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பனிக்காலம் முடிந்து மழை பெய்த பிறகு தான் தேயிலை மீண்டும் பறிக்க முடியும் என்பதால் பசுந்தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனையடுத்து இனி வரும் நாட்களில் தேயிலை உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nilgiris, Ooty, Tamil News