உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஏற்கனவே முதுமலை வனப்பகுதி முழுவதும் களை செடிகள் ஆக்கிரமித்து வன விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் அரிசி பூத்து இறந்து வருவதால் வன விலங்குகளுக்கு கடும் உணவு தட்டுபாடு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
67 சதவீத வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனபகுதிகளில் அதிக அளவில் மூங்கில்கள் உள்ளன. இந்த மூங்கில்கள் காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருப்பதால் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்ந்து வந்து செல்கின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார், மசினகுடி, சீகூர், ஆனைக்கட்டி ஆறுகளின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளன.
இந்த மூங்கில்கள் காட்டு யானைகள் மட்டுமின்றி மான்கள், காட்டெருமைகள், குரங்குகளுக்கும் உணவாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முதுமலையை லண்டானா, எப்பிடோரியம் போன்ற களை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள போதும் இந்த மூங்கில்கள் அவற்றுக்கு உணவாக இருந்து வருகின்றன. 40 முதல் 45 ஆண்டுகளை வாழ்நாளாக கொண்டுள்ள இந்த மூங்கில்கள் தற்போது அரிசி பூத்துள்ளன.
இதனால் பச்சை பசுமையாக காட்சி அளித்த மூங்கில்கள் தற்போது வறண்டு போய் இலைகள் இன்றி அரிசிகளை மட்டுமே கொண்டு காய்ந்து பட்டுபோய் வருகின்றன. அரிசி பூத்துள்ள மூங்கில்கள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் உயிரிழந்துவிடும்.
மூங்கில்களில் பூ பூத்து அரிசி வெளிவந்ததும் உயிரிழந்து விடும். இது மூங்கில்களுக்கு உண்டான குணாதிசியமாகும். குறிப்பாக மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் ஒரே நேரத்தில் அரிசி பூத்து இருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருவதுடன் அவை இறப்பதை கண்டு வேதனையும் அடைந்துள்ளனர். இதனிடையே யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள் ஒரே காலத்தில் உயிரிழந்து வருவது வனத்துறையினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் கவலை அடைய செய்துள்ளது.
செய்தியாளர்: ஐயாசாமி, உதகை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Ooty