ஹோம் /நியூஸ் /நீலகிரி /

மாயமான இளம்பெண்.. குப்பை தொட்டியில் உடல் பாகங்கள்.. உதகை அரசு மருத்துவமனையை சுற்றும் பாலியல் சர்ச்சை

மாயமான இளம்பெண்.. குப்பை தொட்டியில் உடல் பாகங்கள்.. உதகை அரசு மருத்துவமனையை சுற்றும் பாலியல் சர்ச்சை

இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயம்

மருத்துவமனையில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதே போன்று மாயமான பெண் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருப்பதாக பெண் பணியாளர் தனது புகாரில் சந்தேகம் எழுப்பியுள்ளார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதகை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கிடந்ததாக காணாமல் போன பெண்ணின் தோழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைக்கு எதிராக பாலியல் புகார்களும் வைக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதகை மாவட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி கட்டிடம் முழுமையாக கட்டுவதற்கான பணிகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில் உதகை பேருந்து நிலையம் அருகே மாவட்ட மருத்துவமனை தொடர்ந்து இயங்கி வருகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்லும் உதகை மருத்துவமனையில் 50திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பகீர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி இரவு பெண் பணியாளரும் அவருடன் பணியாற்றி வந்த தோழியும் சேர்ந்து பணிக்கு சென்றதாகவும் ஒருசேர இருவரும் வருகை பதிவு கையெழுத்து போட்ட பிறகு பணிகளை தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பணியை முடித்துவிட்டு வந்து இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு சென்ற தோழியை அதன்பிறகு காணவில்லை என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் மாயமான பெண்ணின் விபரங்களை மேலாளரிடம் கேட்டு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளது. மேலும் மாயமான பெண்தோழி பற்றிய விபரங்களை யாரிடமும் பேச வேண்டாம், யாரும் கேட்டால் அப்படி யாரும் பணியில் சேரவில்லை என்று சொல்ல சொல்லி மிரட்டியதாகவும் பெண் பணியாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் வசம் அதிமுக அலுவலக சாவி: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

மறுநாள் ஒரு வயதான பெண் கை குழந்தையுடன் மாயமான தனது தோழியை தேடி மருத்துவமனை வந்தத்தாகவும் ஆனால் அந்த பெண்ணிடன் பேச விடாமல்  தான் தடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதே நாள் பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட உடற்பாகங்கள் மருத்துவமனையின் குப்பை தொட்டிகளில் கிடந்ததாகவும் இந்த உடற்பாகங்கள் மாயமான தனது தோழியின் உடற்பாகங்களாக இருக்கலாம் இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பெண் பணியாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் அதே மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகின்றது. மேலும் கல்லூரியில் பயிற்சிக்காக வரும் மாணவிகள் சிலரிடம் பணியில் இருக்கும் சில ஆண் செவிலியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று முன்னாள் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் நமக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? - ராமதாஸ் கேள்வி

மருத்துவமனையில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதே போன்று மாயமான பெண் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருப்பதாக பெண் பணியாளர் தனது புகாரில் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்த புகார் தொடர்பாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் அதை விசாரித்துவருவதாகவும் உதகை மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோஹரி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Govt hospital, Nilgiris