மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரும்போது தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்றும் கட்டப்பட்டது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், தீபு, வாளையாறு மனோஜ், சதீசன், சந்தோஷ்சாமி, ஜீத்தின் ஜாய் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் இதுவரை கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது காவல் காண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா உள்பட இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், மேலும் அப்போதைய காவல் கண்காணிப்பாளரின் ஆய்வாளராக இருந்த ஜான் மற்றும் அப்போதைய கூடலூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட பலரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதாலும், தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளதாலும் கால அவகாசம் கேட்டகப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நீதிபதி முருகன் வழக்கை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kodanadu estate, Local News, Nilgiris, Tamilnadu