ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் 27க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறந்தன. இதனையடுத்து வளர்ப்பு பன்றிகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடக, கேரள மாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வரவும் அதேபோல் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் நுழையும் கனரக வாகனங்களில் பன்றிகள், பன்றிகளுக்கான தீவனங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் எல்லை சோதனை சாவடி வழியாக நீலகிரிக்கு வரும் கால்நடை சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களுக்கு கிருமிநாசிகள் தெளித்தும் சாலைகளில் பிளீச்சிங் பவுடர் கொட்டியும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நீலகிரி எல்லைப் பகுதிகளில் உள்ள எட்டு சோதனை சாவடிகளிலும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் மாவட்ட கால்நடை துறையின் இணை இயக்குநர் தலைமையில் பன்றி பண்ணைகளில் துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பண்ணைகளில் உள்ள பன்றிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன பண்ணையாளர்கள் எதுபோன்ற நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல, பண்ணைகளைச் சுற்றி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் திடீரென இறந்தால் துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பன்றிகள் பராமரிப்பில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nilgiris