பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர், உணவகம் ஒன்றில் சாப்பிட்ட உணவால் தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனையை சொமேட்டோவில் ரிவ்யூவ் மூலம் கூறியதை அந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் நீக்கியது பேசுபொருளாகியுள்ளது.
இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட பிராண்ட், உணவுப் பொருள் அல்லது உணவகம் பற்றிய மக்களின் தேர்வுகளில் ‘ரிவ்யூவ்’ முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. சமீபத்தில், பெங்களூருவின் கோரமங்களாவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிறகு கடுமையான உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டதாக திஷா சங்வி என்ற பெண் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலானது. மேலும், உணவின் தரத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக சொமேட்டோவின் கமென்ட்ஸ் பிரிவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சங்வி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, கோரமங்களாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவை எதிர்கொண்ட நபர் தான் மட்டும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது கூற்றை ஆதரிப்பதற்காக, அந்த உணவகத்தில் சாப்பிட்டபோது இதேபோன்ற அனுபவத்தைப் பெற்ற வாடிக்கையாளரின் மற்றொரு ரிவ்யூவின் ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்த்து பதிவிட்டுள்ளார். ஆனால் தனது ரிவ்யூவை அகற்றுவது குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில் சொமேட்டோ நிறுவனத்திடம் இருந்து திஷாவுக்கு மெயில் வந்துள்ளது. இதுதான் தற்போது திஷாவை வருத்தமடையச் செய்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திஷா, ‘சமீபத்தில் கோரமங்களாவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, என்னுடன் வந்த சக நண்பருக்கும் எனக்கும் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நான் சொமேட்டோ-வில் எங்களது அனுபவம் குறித்த ஒரு ரிவ்யூவை எழுதினேன், அவ்வாறு செய்யும்போதுதான் தெரிந்தது கடந்த சில மாதங்களில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட பலருக்கும் இதே போன்ற அனுபவம் இருப்பதைக் கண்டறிந்தேன். இதை மேற்கோள் காட்டி சொமேட்டோ நிறுவனம் எனது விமர்சனத்தை நீக்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்
இதுகுறித்து சொமேட்டோ தரப்பில், சுகாதார மீறலைப் புகாரளிப்பதற்கான சரியான தளம் இது அல்ல என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒரு உணவகம் பற்றிய அனைத்து கருத்துகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அந்த வகையான கருத்துக்கள் உணவுப் பிரியர்களுக்கு சொமேட்டோ பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சொமேட்டோவில் அனுமதிக்கப்படும் வரைமுறையின்படி, எங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. எங்களின் உள்ளடக்க வழிகாட்டுதல்களின்படி, உடல்நலக் குறியீடு மீறல்களைப் புகாரளிக்க சொமேட்டோ பொருத்தமான தளம் அல்ல. இந்த விஷயத்தை விசாரிக்கக்கூடிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிப்பது சரியாக இருக்கும். இந்தக் காரணத்தால், உங்கள் ரிவ்யூவ் நீக்கப்படுகிறது’ என்று சொமேட்டோ தங்கள் தரப்பில் கூறியது.
இதனால், நெட்டிசன்கள் பலரும் சொமேட்டோவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் சொமேட்டோவில் ஆர்டர் செய்யப்படாத உணவு குறித்து அந்த குறிப்பிட்ட தளத்தில் ரிவியூ பதிவிட்டது தவறுதான் என சில ஆதரவுக்குரலும் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.