ஜொமோட்டோ டெலிவரி பாய் தாக்கியதாக கூறிய வழக்கில் திடீர் திருப்பம்...

ஜொமோட்டோ டெலிவரி பாய் தாக்கியதாக கூறிய வழக்கில் திடீர் திருப்பம்...

சம்பவத்தன்று, நடந்தது என்ன என்பது குறித்து டெலிவரி பாய் கண்ணீர் வீடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் டெலிவரி பாய்க்கு ஆதரவாக மக்கள் விவாதத்தில் குதித்துள்ளனர்.

 • Share this:
  பெங்களூரு மட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது ஜொமோட்டோ டெலிவரி பாய் காமராஜ் மீதான பெண்ணின் புகார். காமராஜால் தான் தாக்கப்பட்டதாக அந்தப் பெண் வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. காமராஜுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் களத்தில் குதித்தது ஏன்?

  பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் 1 ல் வசிப்பவர் 31 வயதான ஹிதேஷா சந்த்ரனீ. அழகுக் கலை நிபுணரான இவர், இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமானவர். அடிக்கடி அழகுக் கலை குறிப்புகளை வீடியோவாக வெளியிடுபவர். மார்ச் 9ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஜொமோட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்துள்ளார் ஹிதேஷா.

  ஆனால் ஒரு மணிநேரமாகியும் உணவு வராததால், மீண்டும் செயலியில் அதை ரத்து செய்துள்ளார். அந்த நேரத்தில், உணவு டெலிவரி பாயான காமராஜ், உணவைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். உணவை தாமதமாக தந்தது ஏன் என ஹிதேஷா, காமராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

  வாக்குவாதம் முற்றியதில், காமராஜ் தன்னை தாக்கியதில் மூக்கில் ரத்தம் வடிந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ஹிதேஷா. இன்ஸ்டாகிராமில் ஹிதேஷா வீடியோ வெளியிட்டது மட்டுமின்றி பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற ரேஞ்சில் தொடர்ந்து எழுதவும் ஆரம்பித்து விட்டார். தகவல் அறிந்த ஜொமோட்டோ நிறுவனம், காமராஜை வேலையில் இருந்து நீக்கியது.

  மார்ச் 10ம் தேதி போலீசார் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்; பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பிறகு தான் இந்தக் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை காமராஜ் அழுதபடி கைகூப்பி, கன்னட மொழியில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டார்.

  பின்னர் தமிழில் அவர் வெளியிட்ட வீடியோவில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாகக் கூறியிருந்தார். மேலும், தான் பணிக்கு சேர்ந்து ஐந்தாயிரம் முறை உணவு டெலிவரி செய்துள்ளதாகவும் இதுபோன்ற பிரச்னையை இதுவரை எதிர்கொண்டதில்லை என்றும் கூறினார்.

  காமராஜின் கண்ணீர் வீடியோவும் தமிழ் வீடியோவும் வெளியான பின்னர், சமூக வலைதளங்களில் அவரை ஆதரித்து மக்கள் களமிறங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் ஹிதேஷா தவறு செய்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் பேசத் தொடங்கியுள்ளனர்.

  காமராஜுக்கு ஆதரவாக ட்விட்டரில் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் சிங்வி, பதிவிட்டுள்ளார். அதில், தனிநபர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும் நல்லவேளையாக, மக்கள் உண்மையை அறிய ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 17, 2021)

  காமராஜுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகையான பரினீதி சோப்ரா ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், காமராஜ் தரப்பில் தவறு இல்லை என்று உறுதியாகும் பட்சத்தில், அதற்கான விலையை ஹிதேஷா கொடுக்க வேண்டும் என்றும், காமராஜ் உண்மையில் பாதிக்கப்பட்டவர் எனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
  மேலும் ஜொமோட்டோ நிறுவனம் இதுகுறித்து உண்மையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஹிதேஷா தனது நகத்தை வைத்தே மூக்கில் கீறிக் கொண்டு பின்பு நாடகமாடியிருக்க வேண்டும் என்ற நோக்கில், அவரது படத்தில் நகங்களையும் காயத்தையும் அடையாளமிட்ட படத்தையும் ட்விட்டரில் பரப்பி வருகின்றனர்.  ட்விட்டர் வலைதளத்தில் ஐ சப்போர்ட் காமராஜ் என்ற ஹேஷ்டேக் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், ஹிதேஷா மீது காமராஜ் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: