டெல்லியின் ஏழு எல்லைகள் மூடல்... இளைஞர்கள், தொழில்துறையினர் விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு ஆதரவு

டெல்லியின் ஏழு எல்லைகள் மூடல்... இளைஞர்கள், தொழில்துறையினர் விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு ஆதரவு

கோப்பு படம்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், தலைநகரின் ஏழு எல்லைகள் மூடப்பட்டன. இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கினர்.

 • Last Updated :
 • Share this:
  மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்ப வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்ட போதிலும், 11வது நாளாக டெல்லியில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

  டெல்லி புராரி மைதானத்தில் திரண்டுள்ள விவசாயிகள், தாங்களாகவே உணவு தயாரித்தனர். சப்பாத்தி, சப்ஜி ஆகிய உணவுகளை மைதானத்திலேயே தயார் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். உத்தர பிரதேசம் - டெல்லி எல்லையான காசிபூர் பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் இளைஞர், தொழில்துறையினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் தன்னார்வலர்கள் பலர் காயமுற்ற விவசாயிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினர்.

  இதனிடையே டெல்லி- ஹரியானா எல்லையான சிங்கு-விலும் போராட்டம் நடைபெற்றது. அங்கு ஆலோசனையில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றனர்.இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

  இந்தநிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக, திக்ரி, சிங்கு, லம்பூர்,ஜரோடா உள்ளிட்ட ஏழு எல்லைகள் வழியாக பயணிக்க, டெல்லி போக்குவரத்து போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். அதேவேளையில் பாதர்பூர், சூரஜ் கண்ட் ஆகிய எல்லைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மத்திய அரசு- விவசாய சங்கங்கள் இடையிலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.
  Published by:Vijay R
  First published: