உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நெட்வொர்க் குழும முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மாநில வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.
அவரிடம் 2024 ஜனவரி 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு மக்கள் தரிசிப்பார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யோகி ஆதித்தியநாத் கூறியதாவது, கோயில் கட்டுமானப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்திற்குள் கோயில் கட்டுமானம் நிறைவடையும். பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் தனது கோயிலில் அமரப்போகிறார். இது நாட்டிற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமைக்குரிய நாளாக திகழும் என்றார்.
அத்துடன் அவர் 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக இதுவரை காணாத வெற்றியை உத்தரப் பிரதேசத்தில் பெறும் என்று தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு 80 இடங்களில் 71 இடங்களை வென்றது. 2019ஆம் ஆண்டு 61 இடங்களை வென்றது. வரும் மக்களவை தேர்தலில் 2014இல் வெற்றிபெற்ற 71 இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக கைப்பற்றும் என யோகி தெரிவித்துள்ளார்
ராமசரித்திரமனாஸ் சர்ச்சை குறித்து பேசிய அவர், ''உத்தரபிரதேசத்தில் நாங்கள் பெரிய வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம். வளர்ச்சி குறித்து சிந்திக்காமல் பிரிவினை குறித்து சிந்திக்கும் சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை திசை திருப்ப இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ராமசரித்திரமனாஸ் ஒவ்வொரு வீட்டிலும் மதிப்புகுரியதாகவும் போற்றுதலுக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் தெரியாதவர்கள் இது போன்ற கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்'' என்று பதிலளித்தார்.
மேலும் பாரத் ஜோடா யாத்திரை, பதான் பட சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ''ராகுல் காந்தி எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டால் அவரது கட்சி வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் எதிர்மறை சிந்தனைகளை கைவிடவில்லை. பாரத் ஜோடா யாத்திரை எந்த பலனையும் அவருக்கு தராது என்றவர், “ நாங்கள் எல்லா கலைஞர்களையும் மதிக்கிறோம். எங்களுக்கென திரைப்பட கொள்கைகள் உள்ளன. நிறைய படங்கள் உத்தரப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் உணர்வுகளை பாதிக்குமாறு காட்சிகளை வைக்காமல் இயக்குநர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.” என்று தெரிவித்தார்.
முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டமை குறித்த கேள்விக்கு பதிலளித்து யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களைக் கொண்டிருக்கும். முலாயம் சிங் யாதவ் அவரது மக்கள் சேவைக்காக பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இது சமாஜ்வாதி கட்சி பிஜேபிக்கு நன்றியைக் காட்ட ஓர் சிறந்த வாய்ப்பு. ஆனால் முலாயம் சிங் யாதவிற்கு சமாஜ்வாதி கட்சி தனது மரியாதையை அளிக்கவில்லை'' இவ்வாறு அவர் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yogi adityanath