இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை: விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு

43 விமானங்களில் வந்த 9,156 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை: விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு
கோரோனா பாதிப்பு
  • News18
  • Last Updated: January 23, 2020, 9:23 AM IST
  • Share this:
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. அதேநேரம் இந்தியாவில் இதுவரை அந்த வைரஸ் பரவவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் ஊஹான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது அந்த நகரத்திற்கு வேறு நகரங்களில் இருந்து யாரும் செல்ல வேண்டாம் என்றும், அங்கே உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை 17 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 470 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அங்கு மருத்துவம் பார்க்கும் செவிலியர்  ஷூ தினிக்குசன் பேசுகையில் “ எங்கள் மனதைத் தொட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பயமாக அச்சமாகத்தான் இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரும் கவலைப்படுகின்றனர். ஆனாலும் இந்த சீருடையில் நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் மருத்துவப் பணியாளர்கள். வெள்ளை சீருடையில் எங்கள் கடமையை செய்தாக வேண்டும் “ என்றுக் கூறினார்.


நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தததாக 2,197 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான ஹாங்காங்கிலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பன்றிக் காய்ச்சல், எபோலா பாதிப்பு ஏற்பட்டபோது அறிவிக்கப்பட்டதைப் போன்று மருத்துவ அவசர நிலையை அறிவிப்பது பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

சீனாவில் இருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே கடும் பரிசோதனைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உட்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களுக்கு விமானம் மூலம் வருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க விமான நிலைய சுகாதார நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல்நலக்குறைவு குறித்து தாங்களே முன்வந்து தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 43 விமானங்களில் வந்த 9,156 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்தை தொடர்ந்து மேலும் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அனைத்து நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்