ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான்! எடியூரப்பாவை நெருங்கும் சிக்கல்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை முதலமைச்சர் குமாராசாமி வெளியிட்டார்.

news18
Updated: February 11, 2019, 8:40 AM IST
ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான்! எடியூரப்பாவை நெருங்கும் சிக்கல்
எடியூரப்பா
news18
Updated: February 11, 2019, 8:40 AM IST
மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏவுடன் பேரத்தில் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான் என்று கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக குமாரசாமி பதவிவகிக்கிறார். பா.ஜ.கவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.

இதற்காக கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க பா.ஜ.க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ என்ற திட்டத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருப்பினும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை முதலமைச்சர் குமாராசாமி வெளியிட்டார்.

ஆனால் அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று எடியூரப்பா மறுத்துவந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார். மேலும் பா.ஜ.கவினரும் குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது என்று தெரிவித்தனர். இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்பவும் உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘நான் தங்கியிருந்த இடத்திற்கு என்னிடம் பேச குமாரசாமிதான், குருமித்கல் தொகுதி ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.வின்(நாகன கவுடா) மகனை நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பினார். அவர் என்னிடம் வந்து பேசியது உண்மைதான். நாங்கள் பேசிய உரையாடலில் தேர்வு செய்து சில பேச்சுகளை மட்டுமே குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது எனது குரல் தான்.

குமாரசாமி தரம் தாழ்ந்த, மிரட்டல் போக்கு கொண்ட அரசியலை செய்கிறார். அதில் சில உண்மைகளை மூடி மறைத்துவிட்டனர். நாங்கள் உண்மையாகவே என்ன பேசினோம் என்பது பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியே வரும். சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...