ஹோம் /நியூஸ் /இந்தியா /

நினைவுகள் 2022: நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவங்கள்!

நினைவுகள் 2022: நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவங்கள்!

குற்ற சம்பவங்கள்

குற்ற சம்பவங்கள்

year ender 2022 | கடந்த 2022ஆம் ஆண்டு அரங்கேறிய குற்ற சம்பவங்களின் தொகுப்பை காணலாம்.

  • News18 Tamil
  • 7 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜனவரி 2022:

1. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்த சிறுமி தஞ்சாவூரில் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கடந்த ஜனவரி 19ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி மரணத்துக்கு மதமாற்றம் காரணம் எனக் கூறி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (30) கடந்த ஜனவரி 28ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள்தான் சவுந்தர்யா. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த இவர், 4 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3. கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது கடும் குளிரால் அவர்கள் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 2022:

1. திருவள்ளூர் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பூசாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர். நாகசாந்தி பூஜை செய்வதாக இரவு முழுவதும் தனியாக அழைத்து சென்ற பூசாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

2. திருப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் வைத்து விட்டு மனைவியை காணவில்லை என நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

3. கன்னியாகுமரியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி 5 கொலைகளுக்கு மேல் செய்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கேரளா பெண் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சிக்கியுள்ளார். பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்.

மார்ச் 2022:

1. செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருக்கழுக்குன்றம் வல்லிபுரம் சுற்றுவடார மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவ - மாணவிகள் சிலர், கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தில் பீர் குடித்து கும்மாளம் அடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2. நெல்லை அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி என்கவுண்ட்டரால் சுட்டு கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடைசியாக ஒரு கொள்ளை வழக்கில் கைதான நீராவி முருகன் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி ஓட முயற்சித்தது மட்டுமல்லாமல், போலீசாரை வாளால் வெட்டினான். இதனால் போலீசார் தற்காப்புக்காக நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

ஏப்ரல் 2022:

1. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து இந்த விபத்தில், தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

2. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை தண்டவாளத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரயில் நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

3. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் போராடி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மே 2022:

1. கேரளா மாநிலம் காசர்கோட்டில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி தரமற்ற ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்த அங்கு ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஷவர்மா பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

2. சென்னை பல்லாவரம் பகுதியில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி மனைவி, குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துக் கொலை செய்த ஐடி நிறுவன ஊழியர், தன் கழுத்திலும் ரம்பத்தை வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3. சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த மே மாதம் 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். பல வருடங்களாக தம்பதியினரின் ஓட்டுநராக இருந்த நபரே பணத்திற்காக அவர்களை கொலை செய்து, தம்பதியினரின் பண்ணை வீட்டிலேயே சடலத்தை புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4. டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி திடீரென விபத்து ஏற்பட்டது. 4 மாடி கட்டிட வளாகத்தில் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஜூன் 2022:

1. குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி திரைப்பட காட்சிகளை விஞ்சும் அளவுக்குப் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்தனர்.

2. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில், கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

3. சேலத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி பெண் என்ஜினியர் மனைவியை கிரிக்கெட் மட்டையால் கணவர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை இல்லாததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கணவர் கொடூர செயலில் ஈடுபட்டார்.

ஜூலை 2022:

1. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் பனிரெண்டாம் பகுப்பு வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு தனியார் பள்ளி வளாகம் முன்பு கடந்த ஜூலை மாதம்  17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க செய்தது.

2. ராஜபாளையத்தில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தம்பதியினர் அவர்களது வீட்டில் வெவ்வேறு அறைகளில் சடலமாக மீட்கப்படட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 2022: 

1. சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர், கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

2. பள்ளிப்பாளையம் அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கபட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏரிக்கரையில் கத்திகுத்து காயங்களுடன் தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்டார்.

செப்டம்பர் 2022:

1. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (42) குவைத்தில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்ததால், தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என முதலாளியிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரது முதலாளி முத்துக்குமரனை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சுட்டு கொன்றுவிட்டார்.

2. சென்னையில் செப்டம்பர் 4ஆம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளரை,   தரகர் கொலை செய்தது விசாரணையில்  கண்டுபிடிக்கப்பட்டது. உல்லாசத்திற்கு பெண்கள் வர தாமதமானதால் தயாரிப்பாளர், தரகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தரகர் அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3. காரைக்காலில் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தன் மகளை விட நன்றாக படித்த 8ஆம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த சக மாணவியரின் தாய் கைது செய்யப்பட்டார்.

4. உத்தரகாண்டில் உள்ள ரிசார்ட்டில் வேலை செய்து வந்த 19 வயது இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிசார்டின் உரிமையாளர் உடலுறவுக்கு அழைத்ததற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்தது அம்பலமானது.

அக்டோபர் 2022: 

1. கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையில் தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2 பெண்களையும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மந்திரவாதி இருவரையும் கொலை செய்து உடல்களை வெட்டி தம்பதியினர் இருவரையும் சாப்பிட சொன்னதாக தகவல் வெளியானது. இந்த பகீர் சம்பவம் பலரையும் உலுக்கியது.

2. அரியலூரில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தீபாவளிக்கு முயல் வேட்டையில் ஈடுபட்ட போது முயல் என நினைத்து இரண்டு பெண்களை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3. சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20) இளைஞர் சதீஷ் (23) கடந்த அக்டோபர் 13-ம் தேதி மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சோகம் தாளாமல் மாணவியின் தந்தையான கால் டாக்ஸி ஓட்டுநர் மாணிக்கம் தற்கொலை செய்துகொண்டார்.

4. கன்னியாகுமரி அருகே கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த இளம் பெண்ணின் செயல் நடுநடுங்க செய்தது.

5. கோவை கோட்டமேடு கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர் வீட்டில் 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நவம்பர் 2022:

1. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷரீக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பேசும் பரவலாக மாறியது.

2. மும்பையில் லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்த காதலி ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வீசிய காதலனை கடந்த நவம்பர் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

3. திருப்பூரில் கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். பேச்சை கேட்காமல் சினிமாவில் நடிக்க சென்றதால் கணவர் ஆத்திரத்தில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4. உத்தரபிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவியான அந்த இளம்பெண் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தையே மகளை சுட்டு கொன்றது அம்பலமானது.

டிசம்பர் 2022:

1. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண்ணை அவரது கணவரே கொலை செய்து  கூர்மையான ஆயுதத்தால் சடலத்தை 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2. திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி மனைவி, மகன், மகள்களை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.

3. ஜார்கண்டில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த நடிகை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாபநாசம் பட பாணியில் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளரான அவரது மனைவி மற்றும் திட்டம் போட்டு கொடுத்த சாமியார் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி கொலை செய்து சடலத்தை மறைத்துள்ளார்.

First published:

Tags: Crime News, India, YearEnder 2022