குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 11 கட்சிகள் ஒன்றாக இன்று நடத்திய கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். மோடி பிரதமரான பின் பாஜக தலைமையின் மீது இவருக்கு மெல்ல அதிருப்தி ஏற்பட்டுவந்த சூழலில் 2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார். 2021ஆம் ஆண்டு மம்தாவின் திரிணாமூல் கட்சியில் சேர்ந்த அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட, அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளுக்கு மம்தா கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.
I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022
கடந்த 15ஆம் தேதி மம்தா பானர்ஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த மம்தா விரும்பினார். ஆனால், இதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரை நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார். மம்தாவின் விருப்பத்திற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,இன்று காலை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யஷ்வந்த் சின்ஹா வெளியிட்ட ட்வீட்டே இந்த புதிய திருப்பத்திற்கு காரணம். இவர் தனது ட்விட்டர் பதிவில், 'திரிணாமூல் கட்சியின் மிக மதிப்பு மிக்க பதவி கொடுத்து என்னை கவுரப்படுத்திய மம்தா பானர்ஜிக்கு நன்றி. மிகப் பெரிய தேசப் பணிக்கான நான் கட்சி பணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற உள்ளேன். இந்த முடிவை மம்தா ஏற்பார் என நம்புகிறேன்' என்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்ததா பாஜக.. சிவசேனா எம்.எல்.ஏக்கள் 11 பேர் சூரத்தில் முகாம் - பரபரக்கும் மகாராஷ்டிரா அரசியல்
இதைத்தொடர்ந்து இவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளாரக களமிறங்குகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜுன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamata banerjee, President, TMC