பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்!

யஷ்வந்த் சின்ஹா

பீகாரைச் சேர்ந்த சின்ஹாவுக்கு வயது 83, இவர் ஐஏஎஸ் அதிகாரியாக 24 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பின்னர் பாஜகவின் தேதிய துணைத் தலைவராகவும் இருந்தார்.

  • Share this:
பாஜகவின் மூத்த தலைவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சந்திர சேகரின் அரசில் மத்திய நிதியமைச்சராகவும் இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பீகாரைச் சேர்ந்த சின்ஹாவுக்கு வயது 83, இவர் ஐஏஎஸ் அதிகாரியாக 24 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பின்னர் பாஜகவின் தேதிய துணைத் தலைவராகவும் இருந்தார். 2018ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இருந்தே வெளியேறினார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த யஷ்வந்த் சின்ஹா, மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே திரிணாமுல் காங்கிரஸில் இருந்து சாரை சாரையாய் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸுக்கு தெம்பூட்டும் விதமாக முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இணைந்துள்ளார். சின்ஹாவின் வருகை பாஜகவை எதிர்கொள்ள திரிணாமுல் காங்கிரஸுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளதாக கூறப்படுகிறது.கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் கட்சியின் தலைமையகத்தில் எம்.பி டெரிக் ஓ பிரையன், சுதிப் பந்தோபாத்யா, சுப்ரதா முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். யஷ்வந்த் சின்ஹாவின் வருகை தங்களுக்கு பெருமையை தந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறினர்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தது குறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், நீதித்துறை உட்பட நாட்டின் நிறுவனங்கள் அனைத்தும் வலுவிலந்து விட்டன. இது ஒரு அரசியல் மோதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதலும் கூட என தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் போராட்டம், சீனாவுடனான எல்லை விவகாரம் போன்றவற்றில் வாஜ்பாய் கையாண்டதை போல பிரதமர் மோடி கையாளவில்லை என குற்றம்சாட்டினார்.

யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா பாஜகவில் உள்ளார். மேலும் அவர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய மோடி அரசில் ஜெயந்த் சின்ஹா மத்திய விமானத்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: