இஸ்லாமியர்களின் யுனானி மருத்துவ சிகிச்சை முறையை கொண்டாடும் விதமாக உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது. யுனானி மருத்துவத்தின் முன்னோடியான, இந்தியாவைச் சேர்ந்த ஹக்கிம் அஜ்மல் கானின் பிறந்த தினமான பிப்ரவரி 11ஆம் தேதி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த செய்தியில் யுனானி மருத்துவ தினத்தின் வரலாறு, அஜ்மல் கான் குறித்த தகவல்கள், இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள் உள்ளிட்ட பலவற்றை பார்க்க இருக்கிறோம்.
யுனானி நாள்: முக்கியத்துவம்
உலக அளவிலான சுகாதார அரங்கில் யுனானி மருத்துவத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் விதமாக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், அஜ்மல் கானுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இது கொண்டாடப்படுகிறது.
சிகிச்சை மற்றும் அஜ்மல் கான் குறித்த வரலாறு
உடலில் உள்ள நீர், சளி, ரத்தம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு யுனானி மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய 4 அமைப்புகளுடன் தொடர்புடைய உடல் அங்கங்கள் ஆகும். இந்த தியரி முதன் முதலில் கிரீஸ் நாட்டில் உருவானது. யுனானி என்பதன் அர்த்தம் கிரீக் ஆகும். ஆனால், இதற்கு அடுத்தபடியாக அரேபியா மற்றும் பெர்ஷியாவில் உள்ள முஸ்லிம் அறிஞர்கள் அல்லது ஹக்கிம்ஸ் போன்றவர்களால் இது மேம்படுத்தப்பட்டதன் காரணமாக இஸ்லாமியர்களின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையாகவே மாறிவிட்டது.
இந்தியாவில் யுனானி மருத்துவ முறையை புதுப்பித்து, அதை எல்லோருக்கும் அறியச் செய்தவர் ஹக்கிம் அஜ்மல் கான் ஆகும். யுனானி மருத்துவம் குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக டெல்லியில் செண்ட்ரல் காலேஜ், திபியா காலேஜ் மற்றும் ஹிந்துஸ்தானி துவார்கனா ஆகியவற்றை அவர் நிறுவினார். பாரம்பரியமிக்க ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை நிறுவியர்களில் அஜ்மல் கானும் ஒருவர். இது மட்டுமல்லாமல் இந்திய முஸ்லீக் கட்சியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவரது பிறந்த நாளை மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக யுனானி தினமாக கொண்டாடி வருகிறது. நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து யுனானி மருத்துவ சிகிச்சை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் யுனானி மருத்துவம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், யுனானி அடிப்படையிலான உணவு முறைகள் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவது, நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவருக்கு ஆரோக்கியமான வாழ்வை யுனானி முறையில் மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.