• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இன்று உலக புற்றுநோய் தினம் : வரலாறும், முக்கியத்துவமும்.. புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களோடு உடன் நிற்போம்..

இன்று உலக புற்றுநோய் தினம் : வரலாறும், முக்கியத்துவமும்.. புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களோடு உடன் நிற்போம்..

கோப்பு படம்

கோப்பு படம்

புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவோம் என ஒவ்வொருவரும் வாக்குறுதி எடுங்கள். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.

  • Share this:
உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு நாளாக இது பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய முன்முயற்சியாகும். இது பல மில்லியன் கணக்கிலான உயிர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கின்றது. இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்த, நோய் பற்றிய கல்வியினை வழங்குதல் மற்றும் நாட்டு அரசாங்கங்களுக்கும் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நோய் தடுப்பு பற்றிய அழுத்தங்களை பிரயோகித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இந்த தினம் குறிக்கிறது. இந்த உலகளாவிய அவசரநிலையை சமாளிக்கவும் நோயைக் கட்டுப்படுத்துவதில் நமது பங்கு என்ன என்ற முக்கியமான செய்தியை பரப்ப இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த தினத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகள்:

  1. 1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.

  2. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து பரப்புவதற்கான முயற்சிகளில் WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன.

  3. பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

  4. உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் 10 கட்டுரைகளைக் கொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கினர். இந்த ஆவணம் புற்றுநோய்க்கு எதிரான Charter of Paris என்று அழைக்கப்பட்டது. உலகளவில் புற்றுநோய் ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்களில் நிலையான முதலீடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


UICC அமைப்பு இந்த தினத்தில் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது?

UICC அமைப்பு ஆண்டு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறது. மேலும் இந்த தினத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், UICC சுகாதார அமைப்பு புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளை வகுத்தல், பொது சேவை அறிவிப்புகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், புற்றுநோய் தடுப்பு தொடர்பான பல பாடம் புகட்டும் விஷயங்களை வீடியோக்களாக பதிவு செய்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் மையங்களால் வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.

இதுதவிர சில இடங்களில் அணிவகுப்பு நடத்துவது அல்லது உள்ளூர் நிதி திரட்டும் நிகழ்வான அணிவகுப்பு, கச்சேரி, கண்காட்சி அல்லது ஏலம் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிறப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது புற்றுநோய் பற்றிய வானொலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் அந்த முழு வாரமும் சில நாடுகளால் புற்றுநோய் தினம்  கவுரவிக்கப்படுவதைக் காணலாம்.

2021-ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்திற்கான தீம்:

ஒவ்வொரு வருடமும் UICC இந்த தினத்திற்கு ஒரு கருப்பொருளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ‘I can, we can’ என்பது தீர்மானமாக இருந்தது. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராடமுடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது தான் அதன் அர்த்தம். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும். அதன்படி 2021 இன் தீம் என்னவென்றால்  ‘I Am and I Will’ என்பது தான். இதன் அர்த்தம் புற்றுநோயை எதிர்த்து இந்த போரில் வெற்றி பெறுவதற்கான திறனைக் நான் கொண்டுள்ளேன் என்பதாகும்.

புற்றுநோய் அனைவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றது. நம் நாட்டில் தினசரியும் 1300 பேர் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். நாடு முழுவதும் 22.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மார்பகப்புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் தான் நம் நாட்டில் அதிகம். புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். 

அனைத்து மக்களும் புற்றுநோய்க்கு எதிராக தனிநபராகவோ, குழுவாகவோ அல்லது சமூகமாகவோ பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க அதிகாரம் கொண்டுள்ளனர். உலக புற்றுநோய் தினமானது உங்களால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆகவே புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவோம் என ஒவ்வொருவரும் வாக்குறுதி எடுங்கள். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: