’மக்களால் கொல்லப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..’ - பொறுப்பற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகளை எச்சரித்த உயர்நீதிமன்றம்..

டெல்லி உயர்நீதிமன்றம்

தூய்மை பணியாளர்கள்தான் வீடுகளை தினமும் சுத்தம் செய்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகளால் பணம் வழங்கப்படுவதில்லை என்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

 • Share this:
  மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகளும், அரசு மாநகராட்சி அதிகாரிகளும் மக்களால் விசாரணையின்றி கொல்லப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என வழக்கு ஒன்றை விசாரித்தபோது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  யூனியன் பிரதேசமான டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையிலான முரண்களின் காரணமாக, நிதி பற்றாக்குறை ஏற்படுவதால், சம்பளம் தரப்படாமல் பல பணியாளர்கள் பெரும் பொருளாதாரச் சுமையில் இருப்பதாகவும், பொறுப்பற்ற அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களால் கொல்லப்பட்டால் கூட ஆச்சர்யமான விஷயமில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தனது அழுத்தமான கண்டனத்தை நேற்று வெளிப்படுத்தியுள்ளது. வழக்கில் வாதி, பிரதிவாதி சார்பாக ஆஜரானவர்களிடம் பேசிய நீதிபதிகள், “இந்த பிரச்சனைகளையெல்லாம் கடந்த பொறுப்பில் அவர்கள் இருப்பதாக உங்கள் அரசியல் தலைவர்களிடம் போய் சொல்லுங்கள். இந்த நிலை மாறாமல் தொடர்ந்து கொண்டிருந்தால், அரசியல்வாதிகளும், பொறுப்பற்ற அதிகாரிகளும் அடித்துக்கொல்லப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை” என்று தெரிவித்தனர்.

  மேலும் படிக்க: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய டெல்லி பாஜக எம்.பி கவுதம் காம்பீர்!

  மாநகராட்சிக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேவையான நிதியை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி சீர் செய்யுமாறு, டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ”எந்த அளவுக்கு டெல்லி அரசின் மீதும் மாநகராட்சி மீதும் நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம் என சொல்ல என்னால் முடியவில்லை. பணியாளர்களின் மீதான பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் பென்ஷன் தொகை அளிக்காமலும், ஏழைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை நேர் செய்யாமலும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள்” என நீதிபதி சங்கி தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  மனுதாரர்களின் பட்டியலில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், சஃபாய் கரம்சாரிகள் என்னும் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், நான்காம் நிலை ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர். விசாரணையின் போது, ​​கோவிட் -19 நோய்தொற்றின்போது செய்தித்தாள்களில் தவறாமல் பெரிய விளம்பரங்களை வழங்க பணம் இருக்கிறதா என டெல்லி அரசை நோக்கி, நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியதுடன், இந்திய கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் விசாரணை மற்றும் தணிக்கைக்கு உத்தரவிட்டு எச்சரித்தது.

  “தொற்றுநோய் காலத்தில் நீங்கள் எவ்வளவு விளம்பரங்களை அனுப்பியுள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். சி.ஏ.ஜி விசாரணை உத்தரவை பிறப்பிப்போம். ஒவ்வொரு நாளிதழிலும் தினசரி அரை பக்கத்தையும் முழு பக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். இந்த விளம்பரங்களுக்கு உங்களிடம் பணம் உள்ளது, ஆனால் பணியாளர்களுக்கு இல்லை ”என்று அமர்வு தெரிவித்தது. இந்த தூய்மை பணியாளர்கள்தான் மற்றவர்களின் வீடுகளை தினமும் சுத்தம் செய்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகளால் பணம் வழங்கப்படுவதில்லை என்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
  Published by:Gunavathy
  First published: