பெண்கள் முன்னேற்றத்தில் அடுத்த மைல் கல்: என்.டி.ஏ.வில் பெண்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு!

மாதிரிப் படம்

ராணுவம் நாட்டில் மதிக்கப்படும் முக்கிய துறை, ஆனால் பாலின சமத்துவத்திற்காக அவர்கள் அதிகம் செய்ய வேண்டும். மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு மகிழ்ச்சியை தருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டுதல் வகுக்க கூடுதல் அவகாசம் வழங்குமாறும் மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அரசியல், மருத்துவம், விளையாட்டு, திரைத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். எனினும், பாதுகாப்புத் துறையில் பெண்களுக்கான பிரதிநிதிதுவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தற்போது, ராணுவத்துக்கு  குறுகிய கால பணியிலேயே பெண்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    ராணுவத்தின் நிரந்தர கட்டளை பிரிவில் சேர தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (Nationa defence academy) சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  இங்கு முப்படைகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. என்.டி.ஏ. தேர்வை எழுதுவதற்கு 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் 10, 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த தேர்வில் பெண்களுக்கு எதிராக பாலின பாகுபாடு காட்டப்படுவதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

    இந்த தேர்வில் பெண்களையும் அனுமதிக்கக் கோரி  குஷ் கால்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தேர்வுக்கு அனுமதி மறுக்கப்படுவது பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் படிக்க: சட்டீஸ்கர் முதல்வர் தந்தை நந்த குமார் யார்? அவரது சாதி எதிர்ப்பு அரசியல் என்ன?


    இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாத்தி, “ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். என்.டி.ஏ.வில் பெண்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ.  மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் அவர்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

    அதேவேளையில், இதற்கான வழிமுறைகளை வகுக்கவேண்டும் என்றும் அதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆண்டு  தேர்வில் பெண்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: ‘மரம் வளர்ப்பது குற்றமில்லை’- ஈசாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!


    அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி,  “ராணுவம் நாட்டில் மதிக்கப்படும் முக்கிய துறை, ஆனால் பாலின சமத்துவத்திற்காக அவர்கள் அதிகம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தோம். அரசின் நிலைப்பாட்டால் மகிழ்ச்சி அடைகிறோம். சீர்த்திருத்தங்கள் ஒரு நாளில் நடந்துவிடாது என்பதில் நாங்களும் விழிப்புடன் உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: