நாட்டிலேயே படிப்பறிவு அதிகம் கொண்ட மாநிலம் என மார்தட்டிக்கொள்ளும் கேரளாவில் சட்டமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் கடந்த 60 ஆண்டுகளில் ஒரு முறை கூட 10% கடந்ததில்லை என தெரியவந்துள்ளது.
முற்போக்கான மாநிலம் என கருதப்படும் கேரளாவில் இதுவரை ஒரு முறை கூட பெண் ஒருவர் முதலமைச்சராக இருந்தது கிடையாது, அதே போல கடந்த 60 ஆண்டுகளாக கேரள சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10%-ஐ தாண்டியது கிடையாது. இவை அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
1957ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கேரள சட்டமன்றத்தில் இதுவரை 88 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இதில் 9 பட்டியலின, பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டு தொகுதிகளில் இருந்து பெண்கள் தேர்வாகி உள்ளனர்.
140 பேர் கொண்ட கேரள சட்டமன்றத்தில் இதுவரை அதிக அளவாக 1996ம் ஆண்டில் 13 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் பெண்களின் பங்கு 9.28% ஆக இருந்தது.
கேரளாவில் ஒட்டுமொத்த அளவில் குறைந்த அளவே பெண்கள் சட்டமன்றத்தில் நுழைந்திருந்தாலும் கூட ஒரு பெண் மட்டும் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சரான கே.ஆர்.கவுரி முதல் முறையாக கடந்த 1957 தேர்தலில் எம்.எல்.ஏ வானார். கவுரி அம்மா என்றழைக்கப்படும் அவர் 1957-ல் தொடங்கி 1960, 1965, 1967, 1970, 1980, 1982, 1987, 1991, 1996 மற்றும் 2001 என தொடர்ந்து 11 முறை வெற்றி பெற்றுள்ளார். ஜனாதிபதிய சம்ரக்ஷன சமிதி என்ற கட்சியின் நிறுவனரான கே.ஆர்.கவுரி, 1957 சட்டமன்றத்தில் அங்கம் வகித்த உயிருடன் இருக்கும் ஒரே உறுப்பினர் ஆவார்.
2016 தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் 110 பெண்கள் போட்டியிட்டனர், ஆனால் அவர்களில் வெறும் 8 பேர் (5.71 %) மட்டுமே வெற்றி பெற்றனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற பெண்களின் எண்ணிக்கை:
1957 - 6
1960 - 7
1965 - 3
1967 - 1
1970 - 2
1977 - 1
1980 - 5
1982 - 4
1987 - 8
1991 - 5
1996 - 13
2001 - 8
2006 - 7
2011 - 7
2016 - 8
2021 - ?
தற்போதைய 2021 கேரள சட்டமன்ற தேர்தலில் 105 பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் தேர்வாக இருக்கிறார்கள் என்பது மே 2ம் தேதி தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.