நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் தெரிவித்துள்ளார்.
2022-23ம் நிதியாண்டுக்கான 17வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப். 11ம் தேதி வரையும், அடுத்த கூட்டம் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும். தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
நாளை பிப்.1ம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அதற்கடுத்த நாளான பிப். 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிலையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது; இந்த குழுவின் முக்கியமான நோக்கம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது; இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது
ஸ்டார்ட் அப் திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஸ்டார்ட் அப் திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு சிடைத்துள்ளது. தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
தொழில்நுட்ப உற்பத்தி துறையில் இந்தியா தற்போது உலகளவில் முதன்மையான இடத்தில் உள்ளது. அலைபேசி உருவாக்கும் முக்கியமான மையங்களில் இந்தியாவும் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக சிறு-குறு நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. சிறு-குறு தொழில்துறையினர் சரியான காலத்தில் சரியான நிதிகளை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது. உலகிலேயே இந்தியாவின் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது
ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.3லட்சம் கோடியில் கொலேட்டரல் ஃப்ரீ கடன்களை வழங்கியுள்ளது. இந்தியாவை ஏற்றுமதி மையப்புள்ளியாக மாற்ற உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.