WOMAN SARVANT ARRESTED FOR STEALING 150 SAVARAN WORTH OF JEWELERY IN PUDUCHERRY VIDEO VAI
வேலை செய்துவந்த வீட்டில் 150 சவரன் நகையைத் திருடி ஆட்டோ, வீடு வாங்கிய பெண் கைது..
புதுச்சேரியில் தான் வேலை பார்த்த வீட்டில், ஒரு ஆண்டாக கொஞ்சம் கொஞ்சமாக 150 பவுன் நகைகளைத் திருடியுள்ளார் வேலை செய்யும் பெண். திருடிய நகைகளை விற்று, உறவினருக்கு வீடு கணவருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார்.
வேலை பார்த்த வீட்டில் நகைகளைத் திருடியுள்ளார் செல்வி. ஒரு பவுன், 2 பவுன் அல்ல 150 பவுன் நகைகள். திருடிய நகைகளை விற்று புதிய வீடு வாங்கியுள்ளார். பல நாள் திருடி ஒரு நாள் அகப்பட்டது எப்படி?
புதுச்சேரி ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் செல்வி என்ற இருதயமேரி. பிரெஞ்சுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் ஷகிலா என்பவரது வீட்டில் வேலை செய்து வந்தார். ஷகிலா வீட்டின் மாடியில் அவரது தந்தை 82 வயதான அஷ்ரப் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஷகிலா தனது தந்தையின் அறையில் இருந்த அலமாரியில் நகைகளை சரி பார்த்துள்ளார்.
அப்போது 9 நெக்லஸ்கள், 7 ஆரம், 11 சங்கிலிகள், 10 பவுன் தங்கக் காசுகள், 5 பவுன் தங்கக் காசு ஒன்று, 5 கம்மல்கள் என மொத்தம் 150 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நகைகள் திருடப்பட்டது குறித்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகாரளித்தார் ஷகிலா.
போலீசார் சந்தேகத்தின் பேரில், வீட்டு வேலை செய்து வந்த செல்வியைப் பிடித்து விசாரித்தபோதுதான் அவர் தான் திருடியதாக ஒப்புக் கொண்டார். அஷ்ரப் வயதானவர் என்பதால் அவ்வப்போது மேல் மாடிக்கு சென்று வீட்டை சுத்தம் செய்துள்ளார் செல்வி. அப்போது அங்குள்ள பீரோ திறந்து கிடந்துள்ளது; அதில் நகைகள் கண்ணில் படும்படி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஆசைப்பட்டுள்ளார்.
தினசரி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடிச் சென்று தனது உறவினர் பாபு மூலம் விற்றுள்ளார். நகை விற்ற பணத்தில், தனது கணவனுக்கு புதிய ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார். தனது வீட்டையும் புதுப்பித்துள்ளார்.
உறவினர் கமலாவிற்கு சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வியை கைது செய்த போலீசார் அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவன் சார்லஸ், உறவினர்கள் பாபு, கமலா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். செல்வி வாங்கிய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.