ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. 46 பேர் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுத் மலைப் பகுதியில் உள்ள பாபா வைத்தியநாத் ஆலயத்திற்கு சென்றவர்கள் ரோப் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விபத்தில் சிக்கினர். ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 12 ரோப் கார்களில் 48 பேர் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்தோ திபெத் எல்லைக் காவல்படை, ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து களத்தில் இறங்கியது. மூன்று ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ரோப் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது ரோப் காரிலிருந்து கயிறுகள் உதவியுடன் மீட்கப்பட்ட நபர் ஹெலிகாப்டரை எட்டிய போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
Also Read : மதுபோதையில் பணம் கேட்டு வயதான தாயை கொடூரமாக தாக்கிய மகன் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு
திங்கட்கிழமை மாலை வரை மொத்தம் 33 பேர் மீட்கப்பட்ட நிலையில் இருள் சூழ்ந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். விபத்தில் இருவரும், மீட்புப் பணியில் இருவருமாக 4 பேர் உயிரிழந்த நிலையில் 46 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.