பெங்களூரில் கார் பேனட்டை பிடித்துக் கொண்டு தொங்கிய இளைஞரை 2 கி.மீ தூரம் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வெள்ளிக் கிழமை பிற்பகலில் பெங்களூர் ஞான பாரதி நகரில், உல்லால் ரோட்டில், கார் பேனட் மீது இளைஞர் ஒருவர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலற, காரை நிறுத்தாமல் ஆக்ரோஷமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஒரு பெண் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில், காரின் பேனட்டில் தொங்கிய இளைஞர் தர்ஷன் என்பதும் காரை ஓட்டியது பிரியங்கா என்பதும் தெரியவந்தது. தர்ஷன், பிரியங்கா ஆகியோர் தனித்தனி காரில் வந்தபோது, இருவரின் கார்கள் மோதி சிறு விபத்து ஏற்பட்டு, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அதையடுத்து பிரியங்கா ஓட்டிவந்த காரின் முன் பகுதிக்கு வந்து தர்ஷன் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது, பிரியங்கா காரை இயக்கி தர்ஷன் மீது இடிக்க முயல, அவர் கார் பேனட் மீது ஏறியிருக்கிறார். அதன் பின்னரும் காரை நிறுத்தாத பிரியங்கா தொடர்ந்து சாலையில் வேகமாக செல்ல ஆரம்பித்தார்.
பேனட்டில் தொங்கிய படி மரண பயத்தில் தர்ஷன் அலர பெங்களூர் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தர்ஷனை இழுத்து சென்றார் பிரியங்கா. தர்ஷனின் நண்பர்கள் காரை வழிமறித்து பைக்கில் நிற்க அதன்பிறகே பிரியங்கா காரை நிறுத்தினார். இளைஞர் ஒருவர் காரில் தொங்கிய படி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கிடைக்க போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காரை பிரியங்கா ஓட்டிய போது அவரது கணவர் பிரமோத் என்பவரும் அருகிலேயே இருந்தார்.
“இரு கார்கள் இடித்தபோது கூட்டமாக வந்த தர்ஷன் எங்களை மிரட்டியதுடன், என் மனைவியின் ஆடைகளை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். நாங்கள் பயத்தில் காரை எடுக்க முயன்றபோது, பேனட்டில் ஏறியதுடன், அவருடன் வந்தவர்கள் மிரட்டியதால், அங்கிருந்து தப்பிக்க காரை ஓட்டிச்சென்றோம்” என பிரியங்காவின் கணவர் பிரமோத் போலீசாரிடம் கூறினார்.
‘‘கார் மோதியது குறித்து கேட்கச் சென்றபோது பிரியங்கா தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆபாசமாக விரலைக் காட்டி அசிங்கப்படுத்தினார். நியாயம் கேட்கச் சென்றபோது, அவரது கார் என்மீது மோதியது. நான் தப்பிக்க பேனட்டில் ஏறியபோது, 2 கிலோ மீட்டர் இழுத்துச் சென்றார்" எனப் புகார் தெரிவித்திருக்கிறார் தர்ஷன்.
இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்ஷன் மீது பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றது, தாக்க முயன்றது, தகாத வார்த்தைகளால் திட்டியது எனப் பத்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பிரியங்கா, அவர் கணவர் பிரமோத் மீது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியது, கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிரியங்கா, தர்ஷன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Car accident, Woman