தொடர் சரிவில் உள்ள
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்து புத்துயிர் தருவது தொடர்பாகவும், அடுத்து வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து ரயில் மூலமாக ராஜஸ்தான் சென்றார். மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அவர் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி நாட்டின் நலனுக்காக பாடுபட்டதற்கான வரலாற்றை கொண்டது. ஆளும் பாஜகவின் மக்கள் விரோத போக்கை நாடு தற்போது சந்தித்து வரும் சூழலில், நாம் துரிதமாக செயல்படுவது தற்போது அவசியமாகும்.
நமது எதிர் தரப்பினர் தேவைக்கேற்ப மாற்றங்களை வேகமாக தகவமைத்து கொள்ளும் நிலையில், நாமும் முக்கிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். இந்த மாநாட்டிற்கு பின்னர் மாற்றங்கள் காணப்படும். சொந்த விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளி வைத்து காங்கிரசார் செயல்பட வேண்டும். தனி நபர்களை விட கட்சி அமைப்பே பெரியது. கட்சி இதுவரை உங்களுக்காக அனைத்தையும் தந்துள்ளது. தற்போது நீங்கள் கட்சிக்கு திருப்பி தரும் நேரமாகும். சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு நாட்டில் அமைதி, சகோதரத்துவத்தை பாஜக சீர்குலைத்துவருகிறது. அத்துடன், நாட்டில் வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
காந்தியை கொன்றவர்களை கொண்டாடுவது, நேரு போன்ற தலைவர்களின் வரலாற்றை அழிப்பது போன்ற செயல்களில்தான் பாஜக ஈடுபட்டுவருகிறது. மிகவும் தேவையான நேரத்தில் நமது பிரதமர் வாய் மூடி மௌனமாகிவிடுகிறார்' என்றார். மூன்று நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:
சிறுமியுடன் உரையாடியபோது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி!
எந்த ஒரு நபரையும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே பொறுப்பில் வைத்திருக்க கூடாது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி போன்ற முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் இறுதி நாளான வரும் ஞாயிறு அன்று ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.