இந்திய எல்லையான லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், படைகள் பின்வாங்கின. இருப்பினும், சீனா அடிக்கடி அத்துமீறுவதால், பதற்றம் நீடித்தே வருகிறது. இதுவரை பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், பதற்றம் ஓயவில்லை. இதனால், இருநாட்டு வீரர்களும் லடாக் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு தற்போது குளிர் வாட்டுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் இருக்கும் லடாக் பகுதியில் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால், கடும் குளிரை தாங்கும் குடில்கள், சமையல் செய்வதற்கான வசதி மற்றும் கழிவறைகள் கட்டமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன.
இந்திய வீரர்களுக்கு தேவையான குளிர்கால உடைகளும் கடந்த மாதமே கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளையும் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, தயாராக உள்ளன. இந்திய எல்லையையொட்டிய பகுதியில் இருக்கும் சீனா ராணுவம் தற்போது திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
அதனையடுத்து, எல்லைப் பகுதியில் கடும் குளிரும் இந்திய வீரர்கள் தங்கும் வகையிலான குடியிருப்புகளை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது. இரும்பிலான குடில்களை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகள் இருக்கும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. மெத்தைகள், ஹீட்டர்ஸ் போன்ற வசதிகளும் தரப்பட்டுள்ளன. அங்கே, மின்சாரம், தண்ணீர், அடிப்படை மருத்துவ வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
#WATCH Eastern Ladakh: In order to ensure operational efficiency of troops deployed in winters, Indian Army has completed establishment of habitat facilities for all troops deployed in the sector. pic.twitter.com/H6Sm5VG541
இதுகுறித்து தெரிவித்துள்ள ராணுவம், ‘ராணுவ வீரர்களுக்கு வெப்பப்படுத்தப்பட்ட குடில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களை எல்லைப் பகுதிகளில் நிறுத்துவதற்கு ஏற்ப இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர காலத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மைனஸ் 30-40 டிகிரி செல்லசியஸ் வெப்பநிலை நிலவும். நவம்பர் மாதத்துக்குப் பிறகு 40 அடி பனி மழை பெய்யும்’ என்று தெரிவித்துள்ளது.