கொரோனா உயிரிழப்பில் மிரட்டும் கர்நாடகா: டெல்லியை முந்தி 2ம் இடம் பிடித்தது!

மாதிரி படம்

கடந்த 17 நாட்களில் மட்டும் 6,790 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பை சந்தித்திருக்கின்றனர்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியிருப்பது சற்றே நிம்மதி தரும் தகவலாக அமைந்துள்ளது. இருப்பினும் தினசரி பலி எண்ணிக்கை 4,500ஐ கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு மாதமாகவே அங்கு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 17 நாட்களில் மட்டும் 6,790 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பை சந்தித்திருக்கின்றனர்.

இதனிடையே கடந்த திங்களன்று கர்நாடக மாநிலம் கொரோனா உயிரிழப்பில் 22,500ஐ கடந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே உயிரிழப்பில் 2வது இடத்தில் இருந்த டெல்லியை பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2ம் இடத்துக்கு வந்துள்ளது. டெல்லியில் மொத்த பலி எண்ணிக்கை 21,846 ஆக உள்ளது.  83777 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது

மேலும் செவ்வாய்க்கிழமையன்று மேலும் 525 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதில் தலைநகர் பெங்களூருவில் மட்டும் 317 பேர் உயிரிழந்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மே மாதத்தில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் தினசரி நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 400 ஆக உள்ளது.

இதில் ஆறுதல் தரக்கூடியதாக இருப்பது அம்மாநிலத்தில் குணமடைவோரின் எண்ணிக்கை மட்டுமே. நேற்று மட்டும் புதிதாக 30,309 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,395 ஆக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பாதியளவு குணமடைவோராக இருப்பதால் சற்று நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளது கர்நாடகா. இருப்பினும் அங்கு இதுவரை இல்லாத வகையில் இந்த மாதத்தில் 93,247 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கொரோனா நிலவரம் தொடர்பாக பேசிய துணை முதல்வர் அஸ்வத் நாராயணனன், ராமநகராவில் மட்டும் வீட்டுத் தனிமைக்கு அனுமதி கிடையாது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More:  கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 267,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,529 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். 20,08,296. மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,496,330 ஆகவும், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 283,248 ஆகவும் அதிகரித்துள்ளது.
Published by:Arun
First published: