இந்தியாவில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா!

கொரோனா

கடந்த வியாழன் அன்று 35,871 பேருக்கும், வெள்ளியன்று 40,953 பேருக்கும், நேற்று (சனிக்கிழமை)39,726 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது, இதன் மூலம் கடந்த 3 தினங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துகும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,846 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் 197 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த உயர்வானது கடந்த 112 நாட்களில் இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.

கடந்த வியாழன் அன்று 35,871 பேருக்கும், வெள்ளியன்று 40,953 பேருக்கும், நேற்று (சனிக்கிழமை)39,726 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது, இதன் மூலம் கடந்த 3 தினங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது.

மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நோய்த்தொற்றின் பரவல் கடுமையாக அதிகரித்திருப்பதால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 62% அளவுக்கு மகாராஷ்டிரா பங்களிப்பை தந்துள்ளது அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும் சுற்றுலா துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,99,130 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,11,30,288 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,59,755 ஆகவும் அதிகரித்துள்ளது. 3,09,087 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மீண்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மே 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மூடப்படும் எனவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்கும் எனவும் தமிழக அரசு நேற்று அறிவித்தது.
Published by:Arun
First published: