மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏவான தினக்கூலி தொழிலாளியின் மனைவி! - யார் இந்த சந்தனா பவுரி?

சந்தனா பவுரி MLA

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே டிவியில் ஒளிபரப்பான பின்னர் அண்டை வீட்டார் சொல்லித்தான் தெரியும் என கூறினார் சந்தனா பவுரி

  • Share this:
மேற்குவங்கத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே ஏழை வேட்பாளராக அறியப்படும் சந்தனா பவுரி என்ற பெண்மணி, தேர்தலில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

மண் குடிசை வீட்டில், குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் ஏழை பெண் ஒருவர் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றும் இருக்கிறார். இவரே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழை வேட்பாளராக விளங்குகிறார்.

கழிப்பறை வசதி கூட இல்லாத மண் குடிசையில் வாழும், தினக்கூலியாக வேலை பார்ப்பவரின் மனைவியான 30 வயதாகும் சந்தனா பவுரி, மேற்கு வங்கத்தின் சல்தோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மொந்தல் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.

பரம ஏழை குடும்பத்தை சேர்ந்தவரான சந்தனா பவுரியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் கட்டிட வேலை பார்ப்பவர். தினக்கூலியாக 400 ரூபாய் பெற்றுவருகிறார். அதிலும் மழை காலங்களில் இந்த வருமானம் கூட அக்குடும்பத்திற்கு கிடைக்காதாம்.

வேட்பு மனுவில் சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவருடைய அசையா சொத்துகளின் மதிப்பு 31,975 ரூபாய் தான். அவரின் வீட்டில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. அவருடைய வீட்டில் இரண்டு சிறிய அறைகள், அதில் ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரு ஃபேன், மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட ஒரு படுக்கை மற்றும் பள்ளி புத்தகங்கள் உள்ளன.

சந்தனா பவுரியின் வீட்டில் 3 ஆடுகள், 3 மாடுகள் (இதில் ஒரு மாடு திருமண சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது) மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகை உள்ளன

சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் பவுடியின் அசையா சொத்துகளின் மதிப்பு 30,311 ரூபாய் தானாம். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் சந்தனா பவுரி தனது வங்கிக் கணக்கில் 8,335 ரூபாயும், கணவரின் வங்கிக் கணக்கில் 1,561 ரூபாயும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கிறார்.

தேர்தலில் தான் தோல்வி மன உறுதியை இழக்கவில்லை - காங்கிரஸ்


சல்தோரா தொகுதியானது பட்டியலின ஒதுக்கீட்டில் உள்ள தொகுதியாகும். முதலில் தான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே டிவியில் ஒளிபரப்பான பின்னர் அண்டை வீட்டார் சொல்லித்தான் தெரியும் என கூறினார் சந்தனா பவுரி

சந்தனா பவுரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவருடைய தந்தை காலமாகிவிட அவரை இள வயதிலேயே திருமணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை என்றும் தான் எம்.எல்.ஏவாக தேர்வானால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

மேற்குவங்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி: சொந்த தொகுதியில் தோல்வி!


எளிமையான வேட்பாளரான சந்தனா பவுரியின் வெற்றியை சாமானியர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதி சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: