முகப்பு /செய்தி /இந்தியா / டிரம்ப் - மோடி சந்திப்பு : கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் என்னென்ன?

டிரம்ப் - மோடி சந்திப்பு : கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் என்னென்ன?

நரேந்திர மோடி - டொனால்டு ட்ரம்ப்

நரேந்திர மோடி - டொனால்டு ட்ரம்ப்

  • Last Updated :

இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஆனால் அது அமெரிக்க தேர்தலுக்கு முன்பு நடைபெறுமா எனத் தெரியாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் ட்ரம்பின் இந்திய வருகையின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு, குஜராத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அம்மாநில அரசு சுமார் 100 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பகுதி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் 25 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 25,000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுள் சுமார் 12,000 காவலர்கள் ட்ரம்ப்புக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே, ட்ரம்ப்புக்கான பாதுகாப்பு பல அடுக்குகளாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரம்பின் முதல் அடுக்கு பாதுகாப்பை, அமெரிக்காவின் Secret Service படை மேற்கொள்ளும். அதற்கடுத்த இரண்டாம் அடுக்கு பாதுகாப்பை இந்திய தேசிய பாதுகாப்பு முகமையினர் கவனிப்பார்கள். சேட்டாக் கமாண்டோ பாதுகாப்பு படையினர் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பை மேற்கொள்வார்கள். இந்தப் படை மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் அகமதாபாத் தொடர் வெடிகுண்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

இதனிடையே, மொடேரா மைதானத்தில் நடைபெற உள்ள ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு குடிநீர் வழங்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், குடிநீருக்காக 5 லட்சம் மக்கும் தன்மை கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் உபயோகப்படுத்தப்பட உள்ளன. மைதானத்தில் உள்ள 28 வாகன நிறுத்தும் இடங்களிலும், குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வாகன நிறுத்துமிடம் அனைத்திலும் அவசர ஊர்தி நிறுத்தப்படுவதுடன், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, வாகன நிறுத்துமிடங்களில் இருந்து, மைதானம் செல்வதற்கான தொலைவு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் என்பதால், வழியிலும் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் 15 மீட்டர் தொலைவில் குடிநீர் கிடைக்கும் வகையில், சுமார் 100 குடிநீர் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேரிலாண்டில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடன் மிகப் பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாகவும், ஆனால் தேர்தலுக்கு முன்பு அது நடைபெறுமா எனத் தெரியவில்லை என்றும் கூறினார். இந்தியா அமெரிக்காவை சரியாக நடத்தவில்லை என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

Also see:

top videos

    First published:

    Tags: Trump India Visit