சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சுக்மா, பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள தெற்கு பஸ்தர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள், சிறப்பு நடவடிக்கை குழு உட்பட பல்வேறு குழுக்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வெள்ளிக்கிழமை இரவு கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நரசபுரம், மின்பா உட்பட 5 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில், டரம் (tarrem) பகுதியில் ஜோனகுடா (jonaguda) வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாவோயிஸ்ட் கமண்டர் ஹிட்மா தலைமையில் சுமார் 400 மாவோயிஸ்டுகள் மூன்று புறங்களிலும் சூழ்ந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 5 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பல வீரர்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, கூடுதல் படைகள் வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், வனப்பகுதியில் இருந்து அடுத்தடுத்து பாதுகாப்பு படை வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் காணாமல் போன ஒரு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. பாதுகாப்பு படை தாக்குதலில் மாவோயிஸ்ட்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஒரு பெண் மாவோயிஸ்ட்டின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
பாதுகாப்பு படையினரின் தியாகம் என்றும் நினைவுகூறுப்படும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமைதி, வளர்ச்சிக்கு எதிரான எதிரிகள் மீதான நடவடிக்கை தொடரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அசாமில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்துவிட்டு டெல்லி திருபிய அமித் ஷா, உரிய நேரத்தில் மாவோயிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் அசாமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராய்ப்பூர் திரும்பினார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் சிஆர்பிஎப் படைப்பிரிவு இயக்குநர் குல்தீப் சிங் நேரில் ஆய்வு செய்தார். சுக்மா மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 26 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.