மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க இடங்களை தாண்டினால், சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவேன் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சூளுரைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியால் பிரச்சாரம் உள்ளிட்ட உத்திகளுக்காக நியமிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைக் கடந்து வெற்றி பெற்றால் சமூக வலைத்தளத்திலிருந்து தான் வெளியேறுவேன் என்று சவால் விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆதரவளிக்கும் ஊடகங்களின் ஊதிப்பெருக்கல்களுக்கு மத்தியில் பாஜக உண்மையில் இரட்டை இலக்கத்தைக் கடக்கவே சிரமப்படும். இந்த ட்விட்டர் பதிவை பாதுகாத்து வையுங்கள், ஏனெனில் நான் கணிப்பதற்கு மேல் பாஜக இடங்களைக் கைப்பற்றினால் நான் சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று, பெரிய அரசியல் தலைவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை பாஜகவுக்கு வரவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த ஆண்டு மேற்கு வங்க மக்கள் வாக்களிக்கும் போது மம்தா தனித்து விடப்படுவார் என்று கூறினார். மேலும் மம்தாவின் அரசியல் வன்முறையையும் ஊழல் ஆட்சியையும் அமித் ஷா விமர்சித்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களைச் சென்றடைய விடாமல் மம்தா ஆட்சி தடுக்கிறது என்றும் விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதிகளையும் மம்தா பானர்ஜி தடுத்து வருகிறார், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் அவர் தடுத்துள்ளார். மத்திய அரசின் 80 நலத்திட்டங்களை மம்தா இதுவரை தடுத்துள்ளார் என்று அமித் ஷா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
294 உறுப்பினர்களுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார் அமித் ஷா.
இதனையடுத்து தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இரட்டை இலக்க இடங்களைப் பாஜக தாண்டினால் சமூக ஊடகத்திலிருந்து தான் வெளியேறுவேன் என்று சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: West Bengal Election