காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தியை வலியுறுத்தவுள்ளோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னணி தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் மோசமான நிலைக்கு ராகுல் காந்தி தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில், "கடந்த 2013 ஜனவரியில் ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். அன்று முதல், கட்சியில் முன்பிருந்த ஆலோசனை கூறும் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது. கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். அனுபவமில்லாத, உதவியாளர் நிலையில் இருக்கக்கூடியவர்கள் கட்சியை நடத்த தொடங்கினார்கள். 2 மக்களவை தேர்தல் தோல்வி, மாநில தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாதது உள்பட காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம்" என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்!
இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டியவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவு கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான். வேறு மாற்று யார் இருக்கிறார்கள்.எனவே, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தியை வலியுறுத்தவுள்ளோம். கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்த்து களமாடி நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருக்க ராகுல் காந்தி இதை செய்ய வேண்டும். இந்தியாவை இணைக்க ராகுல் காந்தி தான் தேவை என்றார்.
காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடி, அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதிகளை முடிவு செய்யவுள்ளது. தற்போதே பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தலைமை ஏற்க விருப்பம் தெரிவித்து வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress President Rahul Gandhi, Mallikarjun Kharge, Rahul gandhi, Sonia Gandhi