ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தநிலையில் டெல்லியிலுள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

சிதம்பரம் வீட்டில் குவிந்த சி.பி.ஐ அதிகாரிகள்
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் தலையீட்டின் பெயரில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.
அதனையடுத்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக முன் ஜாமின் பெற்றுவருகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இந்தநிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன் ஜாமின் அளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
அதனையடுத்து, முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நாளை காலை விசாரணைக்கு வரவுள்ளநிலையில், டெல்லியின் ஜோர்பார் இடத்திலுள்ள ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு இன்று இரவு 7 மணி அளவில் சி.பி.ஐ அதிகாரிகள் குவிந்தனர். ஆனால், அந்த இல்லத்தில் ப.சிதம்பரம் இல்லை. அதனையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் திரும்பச் சென்றனர்.
இருப்பினும், சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்ய சென்றனரா? அல்லது அழைப்பானை அளிக்கச் சென்றனரா என்று தெரியவில்லை. சி.பி.ஐ அதிகாரிகள் குழு மொத்தமாக சென்ற நிலையில், சிதம்பரத்தை கைது செய்யதான் சி.பி.ஐ அதிகாரிகள் சென்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.