நினைவுச் சின்னங்களுக்கான மாபெரும் ஒளிப்படப் போட்டி 2021

wiki monuments photography competition 2021

நினைவுச் சின்னங்கள் தொல்லியல் களங்கள், பாரம்பரியச் சின்னங்கள் என்று அனைத்து வகையான தொன்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டு இப்போட்டி நடக்கின்றது.

  • Share this:
உலகளாவிய அளவில் தொன்மங்களை இணையத்தில் ஆவணப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாபெரும் ஒளிப்படப் போட்டி இந்த ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை நடந்து வருகிறது. இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுவாரியாக இந்த ஒளிப்படப் போட்டி விக்கிமீடியா பொதுவகத்தில் நடந்துவருகிறது.

திறன்பேசியில் சுயமி (செல்ஃபி) எடுப்பவர் முதல் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர் வரை புகைப்படமென்பது ஒரு இயல்பான ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. ஆயிரம் வரிகளில் சொல்லமுடியாத வலியைக்கூடப் புகைப்படங்கள் அரை நொடியில் வெளிப்படுத்திவிடும். வலியை மட்டுமல்லாமல் வாழ்முறை, கொண்டாட்டம், நினைவுகள் என அனைத்து உணர்வுகளுக்கும் காட்சிப் பிரதி அளிக்கக்கூடியது. பொதுவாக, கலைச்செல்வம் என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஓவியம், புகைப்படம், காணொளிகள் எனப் பல்லூடக வகை அனைத்தையும் குறிப்பதால் கலைச்செல்வம் சேகரிப்பில் புகைப்படங்களுக்குத் தனி இடமுண்டு. அவ்வகையில் இணையக் களஞ்சியத்தைக் கொண்டுள்ள விக்கிமீடியா அறக்கட்டளை தனது திட்டங்களுள் ஒன்றான காமன்ஸ் எனப்படும் பொதுவகத்தில் இம்மாதம் முழுக்க ஒரு புகைப்படப் போட்டியினை நடத்துகிறது. பொதுவகம் என்பது 7 கோடி கோப்புகளைக் கொண்டுள்ள இணையத்தில் மிகப்பெரிய காட்சியகமாகும். அந்தப் பொதுவகத்தில் உள்ள படங்களை உலகில் உள்ள அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் படங்களைக் கொடையாகவும் வழங்கலாம்.

உலகம் முழுக்க பிரம்மாண்டங்களைப் புகைப்படமெடுத்துக் காட்சிப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்போட்டி இந்த ஆண்டு தற்போது நடந்து வருகிறது. இந்திய அளவில் இப்போட்டியினை மேற்கு வங்க விக்கிப்பயனர் குழுவினர் ஒருங்கிணைக்கின்றனர். நினைவுச் சின்னங்கள் தொல்லியல் களங்கள், பாரம்பரியச் சின்னங்கள் என்று அனைத்து வகையான தொன்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டு இப்போட்டி நடக்கின்றது. இப்போட்டிக்கு இந்தியாவிலுள்ள இடங்களை யாரும் படமெடுத்துப் போட்டிக்குச் சமர்ப்பிக்கலாம். சிறந்த படத்திற்கும், அதிக படமெடுத்தவர்க்கும் பரிசுகள் இந்திய அளவிலும் உலக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் சுமார் அறுபதாயிரம் மதிப்புள்ள மொத்தப் பரிசுகள் வழங்குகின்றனர். மேலும் அதில் வெற்றி பெறும் பத்துப் படைப்புகள் சர்வதேசப் போட்டியிலும் கலந்து சர்வதேச அளவிலான பரிசையும் பெறும் வாய்ப்புள்ளது. இங்கே போட்டிக்கு ஏற்றப்படும் படங்கள் எல்லாம் அனைத்து மொழி விக்கிப்பீடியாவிலும் இதர திட்டங்களிலும் எளிதில் பயன்படுத்த முடியும். ஆக இங்குச் சேர்க்கப்படும் படைப்புகள் உலகம் முழுதும் பயன்படுத்தவும் ரசிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. புகைப்படக் கலைஞர்களுக்கு உலக அளவிலான ஒரு மேடை எனச் சொன்னாலும் மிகையில்லை.

Also Read:  தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

விதிமுறைகள் என்று பார்த்தால், நீங்கள் சுயமாக எடுத்த படமாக இருக்க வேண்டும். எந்தத் தனிப்பட்ட லச்சினைகளோ பெயர்களோ எழுதாமல் இருக்க வேண்டும். அந்த இடம் பற்றிய தெளிவான விவரத்தைக் கொடுக்க வேண்டும். படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் படங்களை அளிக்க வேண்டும். போட்டிக்கான காலம் செப்டம்பர் மாதம் 30 ஆம் நாளுடன் நிறைவடைகிறது. அடிப்படையில் நினைவுச் சின்னங்களை ஆவணமாக்குவதே இப்போட்டியின் நோக்கமாகும். கோவில்கள், அருங்காட்சியகங்கள், மாளிகைகள், குடைவரைகள் என போட்டித் தளத்திலேயே மாநிலம் வாரியாக தேசிய மற்றும் மாநில முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த இடங்களை அழகாக ஒளிப்படமெடுத்துப் போட்டிக்கு அனுப்பலாம் அல்லது வேறு கவனம் பெறாத முக்கிய இடங்களையும் எடுத்தனுப்பலாம். வெளியே தெரியாமல் உள்ள பல தளங்களையும் இதன் மூலம் கொண்டுவர வாய்ப்பளிக்கின்றனர்.

Also Read:   வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

அதிகக் கல்வெட்டுக்களும், அதிகக் கோவில்களும், அதிகத் தொல்பொருட்களும் கொண்டுள்ள தமிழர் பண்பாட்டினை உலக அளவில் எடுத்துக் காட்ட நல்ல வாய்ப்பாகும். கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற படங்களில் மிகக் குறைந்த படங்களே தமிழகத்தைச் சார்ந்தவை. இதுவரை இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு தொல்லியல் களங்களின் படங்கள் மட்டுமே விக்கிமீடியப் பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாறைகளில் ஓவியமாக்கி ஆவணப்படுத்திய மனிதக்குலத்தின் தொடர்ச்சிதான் மின்னணுக் கோப்புகளாக ஒளிப்படமெடுத்து இணையத்தில் சேர்ப்பதாகும். பொருநை நாகரீகத்தைக் கொண்டாடிவரும் இச்சூழலில் பெருமை தரும் நினைவுச் சின்னங்களை உலகக் காட்சியகங்களுக்குக் கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமையாகும்.

இந்தியப் போட்டிப் பக்கம்
https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2021_in_India

சர்வதேசப் போட்டிப் பக்கம் https://www.wikilovesmonuments.org/awards/

(கட்டுரையாளர்: நீச்சல்காரன், தொழில்நுட்ப வல்லுநர், கணினித்தமிழ் ஆர்வலர், விக்கிப்பீடியர்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: