டிக்டாக்கில் ஆபாச வீடியோ! மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
டிக்டாக்கில் ஆபாச வீடியோ! மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
டிக்டாக்
ராஜஸ்தானைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவரின் மனைவி, டிக்டாக் செயலிக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த செயலியில் நாள்தோறும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருந்த நிர்மல்குமாரின் மனைவியின் செயலில் நாளடைவில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவரின் மனைவி, டிக்டாக் செயலிக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த செயலியில் நாள்தோறும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருந்த நிர்மல்குமாரின் மனைவியின் செயலில் நாளடைவில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதாவது, பார்வைகள் மற்றும் அதிக லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ஆபாசமாக வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கியுள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் நிர்மல்குமார், டிக்டாக் செயலியில் வீடியோ பதிவேற்றுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அவரின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாத மனைவி, டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றுவதை தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் அதிகமாகி, சண்டையில் முடிந்துள்ளது.
இதனையடுத்து நிர்மல்குமாரின் மனைவி, அருகில் உள்ள காவல்நிலையத்தில் சென்று, தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி நிர்மல்குமார் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நிர்மல்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவியின் செயலால் அதிருப்தியடைந்த நிர்மல்குமார், மனைவி கொடுத்த புகாருக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவியை கொடுமைப்படுத்திய புகாரில், நிர்மல் குமாருக்கு எந்த நிவாரணமும் நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனைவியை கொடுமைப்படுத்தியதால், அதற்கான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
இதற்கு பதில் அளித்த நிர்மல்குமாரின் வழக்கறிஞர், நிர்மல் குமார் தரப்பு நியாயத்தை தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு எடுத்துவைத்தார். அதில், டிக்டாக்கில் 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாகவும், அதற்காக தான் அவரை கண்டித்ததாகவும் கூறியுள்ளார். வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றியதற்காக மனைவியை கொடுமைபடுத்தியதை ஏற்கமுடியாது என கூறியுள்ளனர். மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் விவாகரத்து வாங்கிக்கொள்ளலாம் எனவும், அதற்காக ஒருவரை கொடுமைப்படுத்தக் கூடாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
பின்னர் வாதத்தை முன்வைத்த நிர்மல்குமார் வழக்கறிஞர், வழக்கு ஒருதலைப்பட்சமாக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக கூறினார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, முதல் தகவல் அறிக்கை எப்போது ஒருபக்கம் மட்டுமே இருக்கும் என்றும், ஒருபோதும் இரு தரப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாது எனவும் கூறினர். மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கொடுக்குமாறு நிர்மல்குமார் வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பலரும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த அந்த வீடியோ தளத்தை பயன்படுத்தினாலும், ஒரு சிலர் ஆபாச வீடியோக்களை பதிவேற்ற தொடங்கினர். அதிக லைக்ஸூகளை பெறுவதற்கு விரும்பி, இத்தகைய தவறான முறைகளையும் கையாள தொடங்கினர். இது தொடர்பான கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுடன், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அந்த சமயத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதையடுத்து, டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.