ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
'பெண்ணுறுப்புச் சிதைப்பு' ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் புனித சடங்காக தாவூதி, போஹ்ரா சமூகத்தினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் 'பெண்ணுறுப்பு சிதைப்பு' அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? என கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கு ஜூலை 16-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.