கர்நாடகாவில் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை 5-வது நாளாக கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கர்நாடக அரசு ஜூனியர் கல்லூரிகளில் திடீரென இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இத்தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை எதிர்த்து 5 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் ஜே.எம்.காஜி அமர்வில் நடைபெற்று வருகிறது.
Also Read: பிரிவினைவாதத்தை தூண்டும் கட்சிகளை ஒரு நிமிடம் கூட ஆட்சியை தொடர அனுமதிக்கக் கூடாது: பிரதமர் மோடி
கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையின் போது, மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி வர்ம குமார், நூற்றுக்கணக்கான மத அடையாளங்களை மாணவர்கள் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிலையில் ஹிஜாப் அணிய மட்டும் தடை விதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகள், மதத்தின் காரணமாக மட்டுமே கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும், நெற்றியில் திலகமிடுபவர்களும், கழுத்தில் சிலுவை அணிபவர்களும், தலைப்பாகை அணிபவர்களும் வெளியேற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மாணவிகள் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் வினோத் குல்கர்னி, இந்த விவகாரம் இஸ்லாமிய மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை வருவதால் விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்றும் இருப்பினும், ஹிஜாப் அணிய தடை விதித்தால், குரானை தடை செய்வது போலாகும் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, ஹிஜாப் அணிவது கட்டாயம் என குரானில் கூறப்பட்டுள்ளதா என்ற கேள்வியை முன்வைத்தார்.
கர்நாடக அரசு வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, அரசின் சில உத்தரவுகளுக்காக தான் காத்திருப்பதாகவும், இதனால் மனுதாரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.