கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி: காங்கிரஸை விட ராகுல் காந்திக்கு ஏன் முக்கியம்?

ராகுல் காந்தி

காங்கிரஸில் மங்கிப்போன பெருமையை ராகுல் மீட்டெடுக்க கேரளாவில் வெற்றி பெறுவது முக்கியம் என்றாகி விட்ட நிலையில் கேரளாவில் தோல்வி என்றால் வேறு எங்கே தான் வெற்றி பெற முடியும்?

  • Share this:
5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே மாநிலம் என்றால் அது கேரளா தான். கேரள அரசியலானது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் என இரண்டு கூட்டணிகளை சுற்றித்தான் உள்ளது. இவ்விரு கட்சிகளுமே இங்கு மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. தற்போது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஆட்சியிலும், காங்கிரஸ் எதிர்கட்சியாகவும் உள்ளன. இந்நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை தலைமையேற்று நடத்தி வந்தார் ராகுல் காந்தி.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான கடந்த ஞாயிறன்று அவர் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் உள்ள திருநெல்லி ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கேரளாவில் தேர்தல் வரலாற்றை கருத்தில் கொண்டால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஒரு வேளை காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 6 ஆக உயரும். ஏற்கனவே பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நேரடியாகவும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சியிலும் காங்கிரஸ் உள்ளது.

ஆனால் இன்றைய தேர்தல் காங்கிரஸுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதே கள யதார்த்தமாக உள்ளது. ஆரம்பகாலத்தில் கொரோனா பரவலை திறம்பட சமாளித்தது, கேரள வெள்ளத்தை கையாண்டது என பினராயி விஜயன் மீதும் அவரின் அரசு மீதும் பெரிய அதிருப்தி ஏதும் இல்லை.

5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலேயே கேரள தேர்தல் காங்கிரஸைக் காட்டிலும் ராகுலுக்கு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியினால் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர் மீண்டும் கட்சியில் தனக்கான முக்கியத்துவத்தை பெறுவதற்கு கேரள சட்டமன்ற தேர்தல் வெற்றி அவருக்கு அவசியமாகிறது.

இதன் காரணமாகவே கேரளாவில் தேர்தல் பரப்புரையின் போது வடக்கு மாநிலங்களை தாழ்வாகவும், தென் மாநிலங்களை புகழ்ந்தும் ராகுல் பேசியிருந்தார். இது வடக்கே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் கூட தெற்கில் ராகுலுக்கு தெற்கத்தியர் என்ற இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. இருப்பினும் காங்கிரஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உட்கட்சி பூசல் அங்கு வெற்றி வாய்ப்பை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதே அவரின் கவலையாக இருக்கக் கூடும்.

காங்கிரஸில் இழந்த பெருமை ராகுல் மீட்டெடுக்க கேரளாவில் வெற்றி பெறுவது முக்கியம் என்றாகி விட்ட நிலையில் கேரளாவில் தோல்வி என்றால் வேறு எங்கே தான் வெற்றி பெற முடியும்? தற்போதும் இல்லை என்றால் எப்போது தான் ? என்பதே அவர் முன் எழும் கேள்விகளாக உள்ளன.
Published by:Arun
First published: